சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள்; இராணுவம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட ஒருதொகுதி பாலை மரங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு வன பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலேயே அதிகூடிய வனம்  காணப்படுகின்ற ஒரு பகுதியாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக பலரும் பெருமை பேசி வந்தார்கள். இவ்வாறான நிலைமையில் தற்போது தொடர்ச்சியாக யுத்தத்தின் பின்னர் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக அளவில் இடம்பெற்று வருகின்றது

குறிப்பாக கிரவல் அகழ்வு, மணல் அகழ்வு, கருங்கல் அகழ்வு இவ்வாறாக ஒருபுறமாக அளிக்கப்படுகின்ற இயற்கை வளங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிக அளவில் காணப்படுகின்றதாக  தெரிவிக்கப்பட்ட வன பகுதிகளும் பல்வேறு இடங்களிலும் பல்வேறு தேவைகளுக்காக அழிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையிலே வனப் பகுதிகளில் காணப்படுகின்ற பயன்தரு மரங்கள் சட்டவிரோதமாக அறுத்து விற்பனை செய்கின்ற நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக  இடம்பெற்று வருகிறது. வன வள திணைக்களத்தினரின் ஆளுகையில் காணப்படும்  இந்த வனப்பகுதிகளில் இடம்பெறும் இந்த செயற்பாடுகளை  உரிய  திணைக்களங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்ற விடயமாகும்

இந்த வகையிலான அம்பகாமம் வன பகுதியில்  சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட ஒரு தொகுதி மரங்கள் குறித்த பகுதியில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நேற்று முன்தினம் (08) இரவு குறித்த பகுதியில் சட்டவிரோதமாக மரம் அறுக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற இராணுவத்தினரும் வன அதிகாரிகளும் ஒரு தொகுதி மரங்களை மீட்டு  வந்ததோடு அந்த பகுதியில்  இரண்டு நபர்களையும் கைது செய்திருந்தனர்

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் 64 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கி வருகின்ற 642 ஆவது படைத்தலைமையகத்தில்  இருபத்தி மூன்றாவது விஜயபாகு ரெஜிமென்ற்  படை அதிகாரிகள் நேற்று (09) காலை முதல் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலின்போது அந்த பகுதியில் மேலும் அறுத்து  வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலே பெறுமதிமிக்க நான்கு மிகப்பெரிய பாலை மரங்கள்  அறுத்து விழுத்தப்பட்டு தீராந்திகளாக்கப்பட்ட  நிலைமையில் அவைகள் மீட்கப்பட்டன. அவைகள் உரிய வளவள திணைக்கள அதிகாரிகளிடம்  நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

(மாங்குளம் குரூப் நிருபர்– சண்முகம் தவசீலன்)


Add new comment

Or log in with...