புயலால் பாதிக்கப்பட்ட யாழ். விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்

 “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஏற்பவே இந் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பான் புயலால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைச் செய்கை மற்றும் பப்பாசிச் செய்கை முற்றாக அழிக்கப்பட்டிருந்தன. 

இதனால் குறித்த பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தனர். இதையடுத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்  இந்த விவசாயிகள் தமது பயிரழிவுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர். 

இந்நிலையில் விவசாயிகளின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மே மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது குறித்த பயிரழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை முன்வைத்திருந்தார். 

அக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை  அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி அளித்திருந்தது. 

இந்நிலையில் இதற்கான இழப்பிடுகளை வழங்குவதற்கு விவசாய அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியன நிதி இல்லை என தெரிவித்திருந்தன. 

இதையடுத்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ் விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றதை அடுத்து அதற்கான நிதியை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...