சீனாவுடனான பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு ராகுல் 3 கேள்விகள் | தினகரன்


சீனாவுடனான பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு ராகுல் 3 கேள்விகள்

சீனாவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து வெளியிடப்பட்ட வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு பற்றி குறிப்பிடாதது ஏன் என்பது உள்ளிட்ட 3 கேள்விகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசிடம் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது: 

தேசிய நலனே முக்கியமானது. அதை பாதுகாப்பது இந்திய அரசின் கடமை. அப்படியானால், சீனாவுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா வெளியிட்ட அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் முன்பிருந்த நிலை அப்படியே தொடர ஏன் வலியுறுத்தப்படவில்லை? நமது பிராந்தியத்தில் நிராயுதபாணி வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன்? கல்வான் பள்ளத்தாக்கின் பிராந்திய இறையாண்மை பற்றி குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.இந்திய, சீன வெளியுறவு அமைச்சகங்கள் வெளியிட்ட அறிக்கைகளை சுட்டுரையில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு பற்றி குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.ஊடுருவல் உண்மை: இதேபோல் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் அதீர் ரஞ்சன் சௌத்ரி சுட்டுரையில் கூறியிருப்பது: 

சீன ராணுவத்தின் பின்வாங்கலால் இந்திய பகுதியில் ஊடுருவல் நடந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்திய இராணுவத்தைப் போல் அல்லாமல், சீன படையினரால் இமயமலையின் கடுமையான பனிச் சூழலை தாங்க முடியாது. அதுவும் சீன படையினர் பின்வாங்குவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.இதன்மூலமாக இந்திய பிராந்தியத்தில் பெரும் ஊடுருவல் நிகழ்ந்தது என நாங்கள் கூறியது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இருப்பினும் எல்லையில் பழைய நிலை திரும்பும் வரை சிறிதளவும் நாம் நகரக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.   


Add new comment

Or log in with...