பாடசாலை வேன்களுக்கு வர்ணக் குறியீடு

- ஏற்கனவே பதியப்பட்ட வாகனங்களுக்கு மஞ்சள் பட்டி
- புதிதாக இறக்குமதி மற்றும் பதியப்படும் வாகனங்கள் முழுமையாக மஞ்சள் நிறத்தில்
- புதிய பாராளுமன்றம் கூடியதும் இதற்கான சட்டம் மற்றும் வர்த்தமானி

பாடசாலை சேவை வேன்களுக்கு வர்ணக் குறியீட்டை பயன்படுத்தும் புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், பாடசாலை சேவை வேன் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று (07) இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பாடசாலை வேன்களுக்கு வர்ணக் குறியீட்டை அறிமுகப்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்திற்கு அமைய அனைத்து பாடசாலை வேன்களும் மஞ்சள் வர்ணத்தில் அமைந்திருக்க வேண்டும் எனும் யோசனையை தான் முன்வைத்ததாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது எமது நாட்டிலுள்ள வீதிகளில் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்களுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை என்பதோடு, ஒரு சில பார வாகனங்கள், பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு அருகிலேயே பயணிப்பதனால், ஒரு சில சிறுவர்கள் பயப்படும் நிலை ஏற்படுகின்றது. இது சில வேளைகளில் விபத்தாகவும் அமைந்து விடுவதாக, அமைச்சர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் உலகில் பல்வேறு நாடுகளிலும் பாடசாலை மாணவர்கள் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன. நாட்டின் எதிர்காலம் அவர்களே என்பதனால் அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அந்த அரசாங்கங்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்றும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். 

ஆயினும், குறித்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்துள்ள பாடசாலை சேவை வேன்கள் சங்கங்கள், தங்களது வேன்களுக்கு இவ்வாறு வர்ணம் பூசுவதற்கான செலவு அதிகம் என தெரிவித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து, சேவையிலிருக்கும் பாடசாலை வேன்களுக்கு, மஞ்சள் வர்ண பட்டி பூசப்பட வேண்டும் என்பதோடு, எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் வேன்கள் மற்றும் இதற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மஞ்சள் வர்ணத்தில் இருக்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணமே பயன்படுத்தப்படுவதால், அவற்றை ஏனைய வாகனங்களின் சாரதிகளால் இலகுவாக அடையாளம் காண வசதியாக இருக்கும் என்பதோடு, அவற்றிற்கு முன்னுரிமை வழங்கி விரைவாக செல்வதற்கான வழி கிடைக்கும் எனவும் அமைச்சர் இக்கலந்துரையாடலில் தௌிவுபடுத்தியுள்ளார்.

இது தவிர தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தை வழங்கும் வேன் சேவைகளுக்கு, ஒரு சில நிவாரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர இக்கலந்துரையாடலில் அறிவித்துள்ளார்.

புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்டதும், இவ்வர்ணக் குறியீடு தொடர்பான புதிய சட்டத்திற்கான அங்கீகாரம் பெறப்படுவதோடு, வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...