அற்ப அரசியல் இலாபம் தேடும் விஷமப் பிரசாரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்நாட்டை சுபீட்சம் மிக்க பலமான தேசமாகக் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்கள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வளமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சுபீட்சமிக்கதாக நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் வளம் மிக்கவர்களாகத் திகழ்வர். இந்த வகையில் ஜனாதிபதி சகல நடவடிக்கைகளையும் மக்களை முன்னிலைப்படுத்தி மேற்கொண்டு வருகிறார்.

இந்த வேளையில் அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றின் உயர் பதவிகளுக்கு ஒரு சில ஓய்வுபெற்ற திறமைமிக்க இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு கடந்த ஆட்சிக் காலங்களிலும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏனைய அரசாங்க அதிகாரிகளைப் போன்று சிறப்பான முறையில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, கொவிட் - 19 தொற்று தவிர்ப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தலைமையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் சீராகவும் ஒழுங்கு முறையாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் அமைத்துள்ள கொவிட் 19 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்களில் அளிக்கப்படுகின்ற சேவைகள் குறித்து அங்கு தங்கியிருந்த மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

இது மாத்திரமல்லாமல் கொவிட் 19 வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் முப்படையினரும் பொலிஸாரும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து இரவு பகல் பாராது மேற்கொண்டு வரும் பணிகளால் வைரஸ் தொற்று சமூகத்தில் பதிவாவது கட்டுப்பாட்டு நிலையை அடைந்துள்ளது. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி சுமார் ஏழு வார காலத்துக்கும் மேலாக இந்நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு சமூகத்தில் எவரும் உள்ளாகவில்லை.

ஆனாலும் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் உள்நாட்டவர்கள் மத்தியில் தற்போது இவ்வைரஸ் தொற்று பதிவாகின்றது. அவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களாவர்.

இதேநேரம், தற்போதைய சூழலில் வேறு நாடுகளிலிருந்து கடல் வழியாக எவரும் நாட்டுக்குள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடற்படையினர் இரவு பகலாக மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு பொலிஸார் உள்ளிட்ட முப்படையினரும் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி உச்ச அளவிலான சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றனர்.

இந்தச் சூழலில் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு முப்படையினரும் பொலிஸாரும் அளித்து வரும் ஒத்துழைப்புகள் தொடர்பில் காழ்ப்புணர்வு கொண்டுள்ள சில அரசியல்வாதிகள் நாடு இராணுவ மயமாக்கப்படுவதாகவும், இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதாகவும் விமர்சனம் செய்கின்றனர். இது பொதுத்தேர்தல் காலமாக இருப்பதால் இவ்விமர்சனம் பெரிதும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனத்தின் ஊடாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அற்ப அரசியல் இலாபம் தேடலாம் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.

ஆனால் மக்கள் தெளிவான புரிதலுடன் உள்ளனர். இப்பிரசாரம் மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடப் போவதில்லை. இருந்த போதிலும் அவர்கள் தம் முயற்சிகளை தொடரவே செய்கின்றனர்.

இவ்வாறான சூழலில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வட மத்திய மாகாண ஆளுனரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, யாழ். ஊடக மத்திய நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அச்சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் முன்வைக்கும் இவ்விமர்சனத்தை முற்றாக மறுத்துள்ளதோடு அவர்கள் அரசியலுக்காக இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்' எனவும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

அதுதான் உண்மை. இது பொதுத்தேர்தல் காலமாக இருப்பதால் அரசியல் இலாபம் பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு துரும்பையும் பயன்படுத்திக் கொள்வதில் அரசியல்வாதிகள் சளைத்தவர்கள் அல்லர் என்பதையே இவ்விமர்சனம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

அதன் காரணத்தினால் அரசியல்வாதிகளின் அற்ப நலன் தேடும் விமர்சனங்கள், பிரசாரங்கள் குறித்து மக்கள் விழிப்பாகவும், முன்னவதானத்துடனும் செயற்பட வேண்டிய காலமிது. அது நிலைபேறான வளம் மிக்க தேசம் உருவாக பக்கபலமாக அமையும். அதன் ஊடாக அனைத்து மக்களுக்கும் சுபீட்சம் பெற்றுத் தரக் கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...