பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1,747 பேர் கைது

கடந்த 05ஆம் திகதி இரவு 12.00 மணி முதல் நேற்றிரவு 12.00 மணி வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,747 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள்,  சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 310 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் 689 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 252 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 183 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 304 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளில் ரிபிட்டர் வகை துப்பாக்கி 01 உம், 12 துளை  கொண்ட துப்பாக்கிகள் 03 உம், வாள்கள் 02 உம், தோட்டாக்கள் 06 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்நடவடிக்கைகளின்போது 3,982 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  


Add new comment

Or log in with...