மொஹமட் ரியாஜின் மனு மீதான விசாரணை 31 இல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான மொஹமட் ரியாஜ் என்பவரை விடுதலை செய்யுமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இம்மனு பிரியந்த ஜயவர்தன மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனு மீதான மேலதிக விசாரணைகளை ஜூலை மாதம் 31 ஆம் திகதி முன்னெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த மனு மொஹமட் ரியாஜின் மனைவியால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னுடைய கணவருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றே இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னுடைய கணவரை கைது செய்த சந்தர்ப்பத்தில் இரகசிய பொலிஸார் எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக தன்னுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...