மின்சார பாவனையாளர்களுக்கு வீண் குழப்பம் தேவையில்லை!

நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, கொரோனா தொற்று  கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அரசாங்க மற்றும் தனியார் தொழில்துறைகள் அனைத்துமே வழமை நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. குடும்ப பொருளாதாரம் மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரமும் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமை மாத்திரமன்றி, நாட்டின் தொழில்துறைகள் வழமை நிலைமைக்குத் திரும்புவதும் நிம்மதி தரக் கூடிய விடயமாகும். கொரோனா பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கவனமாகக்  கடைப்பிடித்தபடி ஒவ்வொருவரும் வழமை போல தத்தமது அன்றாட வாழ்வுக்குத்  திரும்புவதே இனிமேல் உகந்ததாகும்.  

கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு ஆலோசனைகளை எவரும்  அலட்சியப்படுத்தி விடலாகாது. அவ்வாறு அலட்சியமாக நாம் நடந்து கொள்வோமானால்  மீண்டும் கொரோனா அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை எமக்கு  ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்தபடியே  உள்ளனர்.  

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எமது  நாடு சுமார் இரண்டரை மாதங்கள் முடங்கிப் போய்க் கிடந்தது. ஊரடங்கு உத்தரவு  தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்த காரணத்தினால் மக்கள் தத்தமது  வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஊரடங்கு உத்தரவினாலும் கொரோனா  அச்சத்தினாலும் விவசாயம் மற்றும் தொழில்துறைகளும் போக்குவரத்தும் முடங்கிப்  போனதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் மக்கள்  சிரமம் அடைந்தனர். பொருட்களின் விலைகளும் உயர்ந்தன.  

ஆனாலும் அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை. நீர்,  எரிவாயு, மின்சாரம் போன்ற விநியோகங்களில் சிறியதொரு இடையூறும் ஏற்பட்டு  விடாதபடி அரசாங்கம் அவதானமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அதேசமயம்  நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கு காலஅவகாசத்தையும்  அரசாங்கம் வழங்கியிருந்தது. கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் மக்களுக்கு  இது நிம்மதியை அளித்திருந்தது. ஊரடங்கு வேளையிலும் மின்சாரமும் நீர்  விநியோகமும் தங்குதடையின்றித் தொடர்ந்தன.  

கொரோனா அச்சுறுத்தல் நீங்கிய பின்னர் மின்சாரக் கட்டணப்  பட்டியல் படிப்படியாக பாவனையாளர்களுக்கு வழங்கப்படத் தொடங்கிய பின்னர்தான்  சிக்கல் நிலைமையும் உருவாகியுள்ளது. பெரும் தொகை மின்கட்டணம்  குறிப்பிடப்பட்டு பட்டியல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாவனையாளர்களிடம்  இருந்து புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.  

இதுபற்றி முறையிடுவதற்காகவும், விளக்கம் கேட்பதற்காகவும்  மின்சார சபை அலுவலகங்களிலும், கட்டணம் செலுத்தும் கருமபீடங்களிலும்  பாவனையாளர்கள் இப்போது முண்டியடிக்கத் தொடங்கியுள்ளனர். மின்சாரசபை  கருமபீடங்களில் இப்போது நீண்ட கியூ வரிசையைக் காண முடிகின்றது. மின்சாரக்  கட்டணப் பட்டியல் தொடர்பாக மக்களிடமிருந்து புகார்கள் வந்தபடியே உள்ளன.  மின்கட்டணம் தொடர்பில் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனரென்றே கூற  வேண்டியுள்ளது.  

ஆனாலும் மக்கள் இவ்வாறு குழப்பம் அடைய வேண்டியதில்லை.  எக்காரணம் கொண்டும் மின்விநியோகம் இப்போதைக்கு துண்டிக்கப்படப் போவதில்லை  என்பதை இலங்கை மின்சாரசபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதேசமயம்  பாவனையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ள குழப்பத்துக்கு விளக்கம்  அளிப்பதற்கும் மின்சார சபை முன்வந்துள்ளது. எனவே மக்கள் வீணான  குழப்பத்துக்கு ஆளாக வேண்டிய அவசியமில்லை.   

‘வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனம் மின்சார  அலகு ஒன்றுக்காக அறவிடுகின்ற கட்டணத்தை எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை.  மாத மின்சார கட்டணப் பட்டியலில் அதிக தொகை பதிவாகியிருப்பது கடந்த காலப்  பகுதியில் நுகர்வோர் மின்சாரத்தைப் பயன்படுத்திய அலகுகளின் எண்ணிக்கை  அதிகரித்திருப்பதால் ஆகும்' என்று மின்சார (தனியார் நிறுவனம்) விளக்கம்  அளித்திருக்கிறது.  

அவ்வாறு இருந்த போதிலும் அந்த அளவும் கூட மீண்டும் சரி  செய்யப்பட்டு யூன் மற்றும் யூலை மாதக் கட்டணத்துடன் நுகர்வோருக்கு நிவாரணம்  ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சரிசெய்தல்  முடியும் வரை, கட்டணம் தாமதம் அடைவதன் காரணமாக எந்தவொரு வகையிலும்  மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதென்ற உத்தரவாதத்தையும் மின்சார  நிறுவனம் வழங்கியுள்ளது. இது தொடர்பான விளக்கங்களை மக்கள் அறிந்து  கொள்வதற்காக 1910 என்ற தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.  

எனவே மின்பாவனையாளர்கள் எவரும் வீணாக குழப்பமடைய வேண்டிய  அவசியமில்லை. கொரோனா முடக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  முடிந்தவரை சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என்பதே  அரசாங்கத்தின் நோக்கம் ஆகும். ஆகவே மின்பாவனையாளர்கள் சற்றுப்  பொறுத்திருப்பதே உகந்ததாகும்.  


Add new comment

Or log in with...