மாகாண சபை முறை வலுவடையுமாயின் மக்களின் அநேக பிரச்சினைகள் தீர்க்கப்படும்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு இடதுசாரிகளுடன் கைகோர்த்தல் மற்றும் வட மாகாண மக்களின் பிரச்சினைகள், நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள், தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள்

தொடர்பில் ஈ.பி.டி.பி தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யாழ். மாவட்ட வேட்பாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடல்.

கே: கடந்த காலத்தில் EPRLF அமைப்பின் யாழ். மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த ஆயுதக் குழுவின் தலைவரான நீங்கள் இன்று இடதுசாரி முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்றீர்கள். கடந்த காலம் மற்றும் தற்கால செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

நாம் ஆயுதங்களுடன் அரசியல் நடவடிக்கைகயில் ஈடுபட்ட காலத்திலும் இடதுசாரி பக்கத்திற்குச் சார்பாகத்தான் செயற்பட்டோம். கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களினால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் சில சில குறைபாடுகள் காரணமாகத்தான் நாம் இவ்வாறான நிலைக்கு உள்ளாக்கப்பட்டோம். உயர் கல்வியின் தரப்படுத்தல் மற்றும் எமது பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் எதுவும் தேடிப்பார்க்கப்படவில்லை. இனவாதப் போராட்டங்கள் ஆரம்பமாகின. இவ்வாறான விடயங்கள்தான் நாம் அவ்வாறான பயணத்தை முன்னெடுப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. எனினும் நாம் முன்னோக்கிப் பயணித்தது இடதுசாரி அமைப்பாகவேயாகும்.

இது புலிகள் அமைப்பைப் போன்ற அமைப்பல்ல. தெற்கில் சில சமூக குறைபாடுகள் காரணமாக 1971 மற்றும் 1988, 89ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணி கலவரங்களில் ஈடுபட்டது. அவ்வாறான குறைபாடுகள் எமக்கும் இடம்பெற்றது. நாம் ஐக்கிய இலங்கைக்கும் சமாதானமாகவும், நல்லுறவுடனும் பயணிப்பதே எமது நோக்காக இருந்தது. இதனால் எம்முடன் இணைந்து கொள்வதற்கு விரும்பும் சிங்கள இடதுசாரி அமைப்புக்களைத் தேடிச் சென்றோம். அவ்வாறான அமைப்புக்கள் பெருமளவில் எமக்கு கிடைக்காத போதிலும் அக்காலத்தில் மாற்றுக் குழு என்ற பெயரில் தெற்கில் செயற்பட்ட சிறு குழு எம்மோடு இணைந்துக் கொண்டது. நாம் அவர்களோடு இணைந்து முன்னோக்கிச் சென்றோம். இந்து லங்கா ஒப்பந்தம் வரையிலும் எமது பயணம் சென்ற போது அந்த இந்து லங்கா ஒப்பந்தம் மிகச் சிறந்த ஒன்று என்பதை நாம் விளங்கிக் கொண்டோம். எனவே நாம் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு ஜனநாயகப் பயணத்தைத் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தோம். அக்காலத்தில் EROSE அமைப்பு அல்லது EPRLF அமைப்பு இனவாத சிந்தனையுடன் செயற்படவில்லை.

கே: நீங்கள் லெபனான் நாட்டில் ஆயுதப் பயிற்சியைப் பெற்ற சிறந்த துப்பாக்கி வேட்டுக்காரர் மற்றும் குங்பூ போன்ற தற்காப்புக் கலை, போராட்ட முறையில் தேர்ச்சி பெற்றவர் எனக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இது உண்மையா?

இவை அனைத்தும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பழைய நிகழ்வுகள். அவற்றை மீண்டும் நினைவுபடுத்துவதற்கு விரும்பவில்லை. எமது அரசியல் தேசிய மட்டத்தில் இருப்பதாலும், நான் அந்த அரசியலில் இருப்பதாலும் பழைய விடயங்களைத் தோன்றி கிழப்புவது உகந்ததல்ல என்பதே எனது நிலைப்பாடாகும்.

கே: உங்களது தந்தை மற்றும் மாமாவான சிவநாதன் ஆகியோர் அக்காலத்தில் கடும் கொமினிஸ்ட்வாதிகளாகும். ஏன் நீங்கள் அவர்களது பாதையில் பயணிக்கவில்லை?

கொல்வின் ஆர். டி. சில்வா மற்றும் இடதுசாரிகள் பக்கத்தைச் சேர்ந்தோர் அன்று கூறியது ஒரு மொழி, இரு நாடுகள் என்றேயாகும். அல்லது இரு மொழிகள், ஒரு நாடு என்றாகும். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலைப்பாடுகள் எதுவும் வெளியில் வரவில்லை. அவர்கள் வழிமாறிச் சென்றார்கள். அந்த நிலையினால்தான் எமக்கு EPDP போன்ற கட்சிகளை உருவாக்க நேர்ந்தது. நாம் ஆயுதங்களுடன் போராடிய சந்தர்ப்பத்தில் தெற்கின் முற்போக்கு அமைப்புக்களுடன் இணைந்து இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும் என்பது எமது நோக்காக இருந்தது. எனினும் அவ்வாறான பலமிக்க முற்போக்கு அமைப்புக்களின் ஒத்துழைப்புக்கள் எமக்குக் கிடைக்கவில்லை. எனவேதான் நாம் மாற்றுக் குழுவுடன் இணைந்து முன்னோக்கிச் சென்றோம்.

கே: நீங்கள் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு எதிராகச் செயற்பட்டதால் உங்களுக்கு அந்த அமைப்பினால் கடுமையான மரண அச்சுறுத்தல் இருந்தது. உங்கள் உயிர் மயிரிழையில் தப்பிய சந்தர்ப்பங்களும் உள்ளன?

நாம் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகச் செயற்பட்டோம் எனக் கூறமுடியாது. நாம் எப்போதும் பார்த்தது தேசிய நல்லிணக்கம் மற்றும் ஏனைய இனங்களுடன் ஐக்கியத்துடன் செயற்படுவதற்கேயாகும். அவ்வாறு செயற்படுவதால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என நாம் நம்பினோம். அதற்கு எதிராக அவர்கள் செயற்பட்டதால்தான் எமக்கு அவர்களோடு சில சில விமர்சன நிலைகள் உருவாகியது. விடுதலைப் புலிகள் செல்லும் பயணம் எமது மக்களையும் அழித்து, விடுதலைப் புலிகள் அமைப்பையும் அழித்துக் கொள்ளும் பயணம் என நாம் அப்போதே கூறினோம். இன்று அதுவே நடந்திருக்கின்றது. எனவே எனது நிலைப்பாட்டை நாம் கூறும்போது அவர்கள் எம்மைக் கொலை செய்வதற்கு பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்தார்கள்.

கே: களுத்துறை சிறைகூடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் பயங்கரவாத கைதி ஒருவரினால் உங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது?

ஆம். நான் மரணித்துப் பிழைத்த ஒருவரைப் போன்றவராகும்.

கே: நீங்கள் முற்போக்கு சிந்தனையுள்ள ஆயுதப் போராட்டத்தில் தொடர்பு பட்ட ஒருவராகும். இப்போது நீங்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்திற்குள் வந்திருக்கின்றீர்கள்?

இந்து லங்கா ஒப்பந்தத்தின் பின்னர் தேசிய கட்டமைப்பினுள் பிரவேசித்துஜனநாயக அரசியலின் ஊடாக எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற புரிந்துணர்வும், நம்பிக்கையும் எமக்கு ஏற்பட்டது. எனவே நாம் ஜனநாயக வழியைத் தெரிவு செய்து கொண்டோம்.

கே: தற்போதைய அரசினால் வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றீர்களா?

ஆம். தற்போதைய அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கையும், நல்ல புரிந்துணர்வும் எமக்கு உள்ளது. இந்த அரசாங்கம் எமது பிரதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் என்ற பெரும் நம்பிக்கை எமக்குள்ளது. எனினும் அதற்காக எமக்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். தமிழ் மக்களின் ஒத்துழைப்பு போதியளவில் எமக்கு கிடைக்குமாயின் அரசாங்கத்தினால் இன்னும் இன்னும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஏனையவர்கள் அரசியல் தீர்வுகள் தொடர்பில் கூறும்போது நாம் மாகாண சபை முறை உள்ளது எனக் கூறுகின்றோம். 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபை முறை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களின் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

தமிழ் அரசியல் தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு முன்னர் தமிழ் மக்களிடையே பிரபலப்படுத்தியது, இது பெரும் இனவாத அரசாங்கம் என்றும், அவர்களது செயற்பாடுகள் அவ்வாறான நிலைக்கே செல்லும் என்றாகும். எனினும் ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு அநுராதபுரத்தில் இடம்பெற்ற போது எனக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தது இந்நாட்டின் பெரும்பான்மை மக்களிடமிருந்தாகும். தமிழ், முஸ்லிம் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து அவர்களது வாக்குகளை எனக்கு வழங்கவில்லை. எனினும் நான் இந்நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாகும். பெரும்பான்மை இனமாகட்டும், சிறுபான்மை இனமாகட்டும் அவர்கள் அனைவரினதும் ஜனாதிபதி நானே எனத் தெளிவாகக் கூறினார். நாம் அதனை நம்புகின்றோம்.

கே: வடக்கில் தொழிலற்ற பட்டதாரிகள் பெருமளவில் உள்ளனர். சிறுவயது தொழிலாளர்களும் உள்ளனர். இதற்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன?

பட்டதாரிகளின் பிரச்சினை இருக்கின்றது. எனினும் இப்பிரச்சினை நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் காணப்படும் ஒரு பிரச்சினையாகும். சிறுவயது தொழிலாளர்கள் இப்போது அங்கு காணப்படுவதில்லை. எமக்கும், அரசாங்கத்திற்கும் தெளிவான புரிந்துணர்வு இருப்பதால் தமிழ் மக்கள் எமக்கு போதியளவு வாக்குகளை வழங்கி குறிப்பிட்ட ஆசனங்களைப் பெற்றுத் தந்தால் எம்மால் இந்தப் பிரச்சினையினை இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும். அனைவருக்கும் அரசாங்கத் தொழிலை வழங்க முடியாது. எனினும் எம்மால் வடக்கில் தொழில் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். தொழிற்சாலைகள், விவசாயத் துறை, கடற்றொழில் போன்ற துறைகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

அத்துடன் அப்பிரதேசங்களில் உள்ள தொழிற்சாலைகளை மீண்டும் செயற்பட வைத்தும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கியும் பெருமளவிலான தொழில் வாய்ப்புக்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்க முடியும். கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சில் ஏராளமான திட்டங்கள் உள்ளன. அவற்றின் ஊடாகவும் எம்மால் தொழில்வாய்ப்புக்களை வழங்க முடியும். இப்போது இருப்பது காப்பந்து அரசாங்கமாகும். இதனால் அதிகமான விடயங்களைச் செய்ய முடியாது. எனினும் மீனவ சமூகத்தினுள் நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு இந்தக் காலப்பகுதியில் எமக்கு வாய்ப்பு கிடைத்தது. வருங்காலத்தில் மீனவச் சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதற்கு வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

நன்னீர் மற்றும் கடல் ஆகிய இரு துறைகளிலும் தன்னிறைவு அடையும் நிலையினை ஏற்படுத்துவதற்கும், அதன் மீனவ அறுவடைகளை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு, அதன் ஊடாக பெருமளவிலான வெளிநாட்டுச் செலாவணியை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என நாம் நம்புகின்றோம். அத்துடன் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பலவற்றையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.

கே: உங்கள் கட்சியிலிருந்து ஒருவர் விலகி, சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடுகின்றார்தானே?

தனிப்பட்ட வகையில் வேட்பாளர் ஒருவர் தேர்லில் போட்டியிடுகின்றார். எனினும் எமது கட்சி இரண்டாகப் பிளவு படவில்லை.

கே: உங்களுக்கு பின்னர் உங்களது கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை உருவாக்கி இருக்கின்றீர்களா?

ப.நான் இன்னும் ஐந்து வருடங்களுக்கு மாத்திரமே அரசியல் செய்ய எதிர்பார்க்கின்றேன். அதன் பின்னர் கட்சியினால் அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு அடுத்த தலைவர் ஒருவரைத் தெரிவு செய்து கொள்வார்கள். கட்சி என்பது புகையிரதத்தைப் போன்றதாகும். கொழும்பு புறக்கோட்டையில் புறப்பட்டு காங்கேசன்துறை வரையில் செல்வதைப் போன்றது. சில நேரங்களில் சிலர் புறக்கோட்டையில் புகையிரதத்தில் ஏறி காங்கேசன்துறை வரைக்கும் பயணிப்பார்கள். இன்னும் சிலர் புறக்கோட்டையில் ஏறி இடையில் இறங்கி விடுவார்கள். தொடர்ந்தும் பயணிப்பவர்கள் புகையிரதத்தில் தங்கியிருப்பார்கள். ஏனைய கட்சிகளைப் போன்று எமது கட்சியில் தலைமைத்துவ குழப்பங்கள் ஏற்படப் போவதில்லை.

கே: மாகாண சபை முறையானது இனப் பிரிச்சினைக்கான தீர்வு என நீங்கள் நம்புகின்றீர்களா?

இனப் பிரச்சினை எனக் கூற முடியாது. ஆரம்ப காலத்தில் தெற்கு பிரதேசத்தில்தான் இனவாத பிரச்சினை தோன்றியது. எமது தமிழ் மக்கள் அதனை பெரிதாகப் பார்க்கத் தொடங்கினார்கள். தற்போது அது முடிவுக்கு வந்திருக்கின்றது. எனினும் மாகாண சபை முறை என்பது எமது அரசியல் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுக்குரிய ஆரம்பம் என்றே நான் கருதுகின்றேன். அதிலிருந்து ஆரம்பித்து எம்மால் முன்னோக்கிப் பயணிக்க முடியும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தெற்கு மக்களுக்கு வடக்கிற்குச் செல்லவும், வடக்கு மக்களுக்கு தெற்கிற்குச் செல்லவும் முடியும். அதேபோன்று நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் எந்த ஒருவருக்கும் செல்ல முடியுமான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. எனினும் சில சில அரசுகளின் திட்டமிட்ட வகையில் செய்யப்படுகின்ற செயற்பாடுகளுக்கு நாம் எதிராக கருத்துக்களை முன்வைக்கின்றோம்.

கே: கோவிட் - 19 நிலைமைகளின் போது சுகாதாரத் துறை மற்றும் ஏனைய அனைத்து துறைகளின் செயற்பாடுகளும் மத்திய அரசாங்கத்தின் மூலமே முன்னெடுக்கப்பட்டன. இச்செயற்பாடுகளினால் இந்நிலை மிக வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறான நிலையினுள் எமக்கு மாகாண சபை முறை அவசியம்தானா?

கோவிட் - 19 உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிலும் நிலவிய ஒரு பிரச்சினையாகும். இந்நிலையின்போது எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் மிகச் சிறப்பானவை. இதனையிட்டு நாம் மிகவும் பெருமைப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் யதார்த்தமான பிரச்சினைகள் என்பதோடு, எமது மக்களுக்கு உணர்வு ரீதியிலான சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த மாகாண சபை முறை அவசியமானது என நான் நினைக்கின்றேன். வட கிழக்குப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மாகாண சபை முறையினைக் கொண்டு வந்தாலும் அது நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது தெற்கு மற்றும் ஏனைய பிரதேச மக்களும் இந்த மாகாண சபை முறையினை அனுபவிபத்துக்கொண்டிருக்கின்றார்கள். இன்று மாகாண சபை முறை ஒழிக்கப்படும் எனக் கூறினால் அதனை தெற்கு மக்களும் விரும்புவார்கள் என எதிர்பாக்க முடியாது. அவர்கள் இந்த மாகாண சபை முறையினுள் அனேக விடயங்களைப் பெற்றுக் கொண்டிருப்பதால் அம்மக்களும் இந்த முறையினை ஒழிப்பதற்கு இணங்க மாட்டார்கள்.

கே: சிங்கள படைவீரர்கள் 3000 பேரை படுகொலை செய்ததாக கருணா அம்மான் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

அவர் அவ்வாறு தெரிவித்தாரா என்று எமக்குச் சரியாகத் தெரியாது. அவர் 3000 படைவீரர்களைக் கொலை செய்ததும் எமக்குத் தெரியாது. எனினும் இச்சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பது உகந்ததல்ல என்பதே எனது கருத்தாகும். அவரது அந்தப் பேச்சு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது. அந்த விசாரணைகளின்போது உண்மை பொய் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். எமது ஆயுதப் போராட்டங்களிலும் கூட நாம் அவ்வாறான ஒன்றைச் செய்யவில்லை. அவர் அவ்வாறான விடயங்களைச் செய்திருந்தால் அது தவறாகும்.

கே: தேர்தலின் பின்னர் உங்களுக்கு நல்லதொரு அமைச்சுப் பதவி கிடைக்கும் என நினைக்கிறீர்களா? அவ்வாறு கிடைத்தால் உங்களது எதிர்கால வேலைத்திட்டங்கள் எவ்வாறானதாக அமையும்?

அது மிகவும் பொறுமையுடன் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாகும். அனேக திட்டங்கள் உள்ளன. அவை வடக்கு கிழக்கிற்கு மாத்திரமானதல்ல. இலங்கை முழுவதிலும் எந்தவொரு அமைச்சின் மூலமாகவும் நடைமுறைப்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்கள். எனினும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் நிலைமைகளுக்கு அமைவாக வருங்காலத் திட்டங்களைத் தீர்மானிப்பேன்.


Add new comment

Or log in with...