பெரும்பான்மை சமூகத்துக்கு எதிரான அரசியலை அஷ்ரஃப் எமக்கு காட்டித்தரவில்லை | தினகரன்

பெரும்பான்மை சமூகத்துக்கு எதிரான அரசியலை அஷ்ரஃப் எமக்கு காட்டித்தரவில்லை

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் எதிர்காலத்தில் தீர்கப்பட வேண்டுமானால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான  தேசிய காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலமே தீர்க்கமான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் சட்ட ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

பாலமுனை தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியின் அல் ஹிதாயா வட்டார உறுப்பினர் ஐ.எம்.ஹம்தான் தலைமையில் பாலமுனையில் நடைபெற்ற இளைஞர் அமைப்பினருடானா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது இலக்கு தேசிய காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெற்று அமையப்போகின்ற  ஆட்சியில்  பங்காளியாக சேர்ந்து எதிர்காலத்தில் அரசாங்கத்தில் சிறந்த தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கின்ற கட்சியாக திகழ வேண்டும். இன்று சகோதரர் ஹக்கீமும் றிசாத்தும் எமது சமூகத்தை பெரும்பான்மை சமூகத்துக்கு எதிரானவர்களாக சித்தரித்துக்காட்டும் உணர்ச்சி அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான அரசியலை மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் எமக்கு காட்டித்தரவில்லை. பெரும்பான்மை சமூகத்தோடும் பெரும்பான்மை சமூகத்தவர்கள் பெரும்பான்மையாக ஆதரிக்கின்ற ஆட்சியோடும் ஒன்றித்த அரசியலைத்தான் அவர் செய்தார். இன்று அதே அரசியல் பாதையில் அதே அரசியல் பயணத்தில் தேசிய காங்கிரஸ் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

எங்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது, நாங்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றோம். எனவேதான் தற்போதுள்ள அரசாங்கம் எதிர்வருகின்ற ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யப்போகின்றது. அந்த அரசாட்சியுடன் ஒன்றித்து செயற்படக் கூடிய ஒரு பங்காளி கட்சியாகத்தான் தேசிய காங்கிரஸ் இருக்கப்போகின்றது.

முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிழைக்கின்ற சீசனுக்கு அரசியல் வியாபாரம் செய்கின்ற ஹக்கீம், றிசாத் போன்ற அணியினருக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளினால் எந்த பிரயோசனமும் இல்லை. எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அவர்களினால் தீர்க்க முடியாது. கடந்த நல்லாட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சிகளின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்க நிலையில்தான் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கியது. இவ்வாறானவர்களை நம்பி எமது சமூகம் ஏமாந்ததும் ஏமாற்றப்பட்டதும்  போதும். இனியும் நாம் ஏமாறத்தயாறில்லை. எனவேதான முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவோடு தூய அரசியல் பயணத்தில் நானும் ஒருவனாக இணைந்திருக்கின்றேன் என்றார்.

(ஐ.ஏ. சிறாஜ் - பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...