மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறைகேடு தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய குழு | தினகரன்


மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறைகேடு தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய குழு

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறைகேடாக உபயோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய குழு ஒன்றை அது தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமித்துள்ளார்.  

அதற்கிணங்க மேற்படி நிதியத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் அந்த குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. 

அந்த அறிக்கை ஏற்கனவே கையளிக்கப்பட இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக அது தாமதமாகியது. அந்த அறிக்கை கிடைத்ததும் மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும்.  மேற்படி விவகாரம் தொடர்பில் பெருமளவிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்ட நிலையிலேயே பிரதமரினால் மேற்படி குழு நியமிக்கப்பட்டது. 

எனினும் மேற்படி நிதியத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் கூட நிதி இல்லாத நிலைமை தற்போது காணப்படுகிறது.  அதன் காரணமாக 110 மில்லியன் ரூபாவை மேலதிகமாக பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...