குமார் சங்கக்கார விளையாட்டு குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதியாட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்டநிர்ணய சதி தொடர்பில் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு விளையாட்டு அமைச்சின் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவு அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்தது.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை 9.00 மணிக்கு அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

2011 உலகக் கிண்ண ஆட்டத்தின் போது இலங்கை அணித்தலைவராக குமார் சங்கக்கார செயற்பட்டிருந்தார்.

இதேவேளை, இன்று காலை 10.15 மணியளவில் 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக விளையாடிய முத்தையா முரளிதரனை ஆஜராகுமாறும் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க நேற்று காலை 10.15 மணியளவில் விளையாட்டு தவறுகள் தொடர்பான விசாரணை பிரிவில் ஆஜரானதோடு, சுமார் 2 1/2 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியபின் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில், குறித்த காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா நேற்றுமுன்தினம் (30) குறித்த பிரிவில் சுமார் 06 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...