மின்சார பட்டியல் பிரச்சினைக்கு குழு நியமனம்

- திங்கட்கிழமை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

கொவிட்-19ஐ தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக எழுந்துள்ள மின்சார பட்டியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு கலந்துரையாடி நிவாரணம் வழங்குவதற்கான யோசனையை முன்வைப்பதற்காக 04 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வழங்கப்பட்ட மின்சார பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பாக ஆராயும் குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம், ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன், இக்குழுவுக்கு தலைமை தாங்குகின்றார் என்பதோடு, இக்குழுவில், இலங்கை  மின்சார சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூவர் அடங்குகின்றனர்.

விடயம் தொடர்பில் ஆராய்ந்து  எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவுக்கு, அமைச்சின் செயலாளர் பணித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...