சுற்றிவளைப்புகளில் 46,617 பேர் கைது; பல ஆயுதங்கள் மீட்பு

கடந்த ஜூன் மாதம் 06ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 46,617 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 9,077 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த 17,275 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,140 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 4,413 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 415 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் 89 பேரும், வெடிபொருட்களுடன் 10 பேரும், சட்டவிரோத மதுபானத்துடன் 9,198 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்புகளில் ரி 56 துப்பாக்கி 11 உம், ரி 81 துப்பாக்கி ஒன்றும், 12 துளை கொண்ட துப்பாக்கி 26 உம், கைத்துப்பாக்கி 03 உம், நாட்டுத் துப்பாக்கி 26 உம், ரிபிட்டர் வகை துப்பாக்கி 46 உம், வேறு ஆயுதங்கள் 09 உம், தோட்டாக்கள் 578 உம், வாள் 03 உம், கத்தி 02 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கைகளில் வெடிபொருள் 367 கிராமும், டெட்டனேட்டர் 23 உம், கைக்குண்டு 13 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத மதுபானம் 401,876 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...