பாடசாலைகளை ஆரம்பிக்கும் முதற்கட்ட செயற்பாடுகளை கல்வி அமைச்சர் அவதானிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆசிரியர்கள் காத்திரமான திட்டங்களை வகுத்து சுகாதாரச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி நேர அட்டவணையை தயாரித்துக்கொள்ள வேண்டுமென கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.  

பாடசாலைகளில் மீண்டும் ஒலிக்கப்போகும்  மணியோசை எமது இளம் சந்ததியினருக்கு புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் கொண்டுவரக்கூடியதான செய்தியாக அமைய வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.  

எதிர்வரும் 06ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு நேற்றுமுன்தினம் அனைத்துப்பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் பங்கேற்புடன் கூடிய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டப் பணியான இந்த நிகழ்வுகளில் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் கல்விசாரா ஊழியர்கள் பங்கேற்றனர்.  

இந்த செயற்றிட்டத்தை அவதானிக்கும் பொருட்டு கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு மாவட்டத்திலுள்ள நுகேகொட அனுலா வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம், பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயம், மாலமே ஆண்கள் பாடசாலை போன்றவற்றுக்கு விஜயம் செய்தார்.  

கல்வியமைச்சினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள், வழிகாட்டலுக்கு அமைய கல்விச் செயற்பாடுகளை அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவதை அவதானித்த அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.  

சுகாதாரத் திட்டத்துக்கமைய செயற்படுவது, பிள்ளைகளின் நலன் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை கல்வியமைச்சர் இங்கு வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் பாடப் புத்தகங்களில் சுகாதார நடைமுறை உட்பட பல்வறு விடயதானங்களிலும் மாற்றம்கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

எதிர்வரும் 05அம் திகதிக்கு முன்னர் புதிய வேலைத் திட்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டு 06ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து மாணவர்களும் எந்தவித பிரச்சினைகள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்காதவாறு தமது கல்வியை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்துகொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

எம். ஏ. எம். நிலாம் 


Add new comment

Or log in with...