மஹிந்தானந்த முறைப்பாடு; வாக்குமூலம் பதிவு

- விசாரணைகள் இடம்பெறுகின்றது; ஊடகங்கள் அமைதி காக்கவும்

கடந்த 2011ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பாக தான் கூறிய கருத்து தொடர்பில், 06 பக்கங்களை கொண்ட முறைப்பாடொன்றை இன்றையதினம் (24) பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினருக்கு தான் வழங்கியுள்ளதாக, முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியானது, பணத்திற்காக தாரைவார்க்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

சர்ச்சைக்குரிய இக்கருத்து தொடர்பில், இன்று காலை 6.30 மணிக்கு நாவலப்பிட்டியிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, மஹிந்தானந்த அலுத்கமகேயிடம், விளையாட்டுத் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை, விளையாட்டுத் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் விசேட பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், தனக்கு குறித்த போட்டி தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதால் ஊடகங்களை அமைதியாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
 


Add new comment

Or log in with...