ஹரின் பெனாண்டோவின் கருத்துக்கு ஐ.தே.க. கண்டனம்

ஹரின் பெனாண்டோவின் கருத்துக்கு ஐ.தே.க. கண்டனம்-UNP Condemned Harin Fernando's Statement of Cardinal Malcolm Ranjith

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஹரின் பெனாண்டோ, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த அறிக்கை மூலம் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் செய்ததாகவும் அதன் காரணமாக தங்களுக்கு கிடைக்கவிருந்த வாக்குகள் குறைவடைந்ததாகவும் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே ஐ.தே.க. கண்டனம் வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் கர்தினால் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அவரது சேவைகளை ஒருபோதும் மறந்துவிடலாகாது என, ஐ.தே.க. ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின், தேசிய பட்டியல் வேட்பாளராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, தமது கட்சியிலிருந்து ஹரின் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளதாகவும், ஐ.தே.க. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமைச்சரான மகனை தந்தை காப்பாற்றினார், எமது மக்கள் மரணமடைந்தனர்" என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்ததாக ஹரின் பெனாண்டோ அண்மையில் பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினமன்று, தாம் கேள்வியுற்ற ஒரு செய்தி காரணமாக, என்னை ஆலயத்துக்கு செல்ல வேண்டாமென தனது தந்தை தெரிவித்திருந்ததாகவும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியோ அல்லது அதற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கோ ஏன் தெரியவில்லை என, தான் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்ததாக, ஹரின் பெனாண்டோ அக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தாம் கூறிய இக்கருத்தை வைத்து, மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் செய்ததாக அவர் கருத்து வெளியிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும், தான் அவ்வாறு கூறவில்லை எனத் தெரிவித்துள்ள ஹரின் பெனாண்டோ, முஸ்லிம்களை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த ஒரு சில ஊடகங்கள், தாம் 45 நிமிடங்களாக பேசிய விடயங்களை திரிபுபடுத்தி 2 நிமிடங்களில் தெரிவித்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.

ஆயினும் இது தொடர்பில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரின் பெனாண்டோவின் கருத்துக்கு ஐ.தே.க. கண்டனம்-UNP Condemned Harin Fernando's Statement of Cardinal Malcolm Ranjith


Add new comment

Or log in with...