உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில், ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலான விசாரணையை இலங்கை கிரிக்கெட் செயலாளர் ஆரம்பித்துள்ளார்.

2011ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே, 2011ம் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கான முறைப்பாடொன்றை எடுத்துக்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு, விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து, இதுதொடர்பில் மேலதிகமாக ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த ஆட்டநிர்ணயம் தொடர்பில், மஹிந்தானந்த அலுத்கமகே சிரச ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில், “2011ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவம் நடைபெறும் போது, நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன். எனினும், நாட்டில் பதற்ற நிலை ஏற்படும் என்பதற்காக குறித்த விடயத்தினை வெளிப்படுத்தவில்லை. 2011ம் ஆண்டு நாம் இந்திய அணிக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது” என்றார். எவ்வாறாயினும் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் திலான் சமரவீர ஆகியோர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் உண்மையாக இருந்தால், ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும், அதற்கான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார். தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும குறித்த இந்த விசாரணை தொடர்பிலான வாராந்த அறிக்கையொன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...