வரக்காபொல வங்கி கொள்ளை; சந்தேகநபர் கைது

வரக்காபொல நகரில் அமைந்துள்ள அபிவிருத்தி வங்கியில் கொள்ளை போன சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் இன்று (22) அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 02ஆம் திகதி இரவு வேளையில், குறித்த வங்கியிலிருந்து 18 இலட்சத்து 66 ஆயிரத்து 843 ரூபா பணமும், 28 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தங்கநகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, கேகாலை  குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எந்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தளையைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி, ரம்புக்கணையிலுள்ள அபிவிருத்தி வங்கியினுள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சந்தேகநபருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களினால் 13 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

திருடப்பட்ட பணம் மற்றும் தங்கநகைகளுடன் வரகாபொல பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வங்கியிலிருந்து திருடப்பட்ட 13 இலட்சத்து 32 ஆயிரத்து 840 ரூபா பணம், ஒரு கையடக்கத் தொலைபேசி, 02 தேசிய அடையாள அட்டைகள், ஒரு சி.சி.ரி.வி. கமெராவின் ஹார்ட் டிஸ்க் (Hard Disk), வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று, துளை கருவி உள்ளிட்ட பொருட்கள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரை இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 


Add new comment

Or log in with...