இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக பல்கலைக்கழகம் ஜூன் 22 இல் ஆரம்பம்

இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக பல்கலைக்கழகம் ஜூன் 22 இல் ஆரம்பம்-Universities Final Year Will Be Open From June 22

அறிவிக்கப்பட்ட படி மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சை ஜூன் 15 முதல்

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று முதல் கட்டமாக, அனைத்து மருத்துவ பீடங்களும் தங்களது இறுதி ஆண்டு பரீட்சைக்காக (Final MBBS) நாளை மறுதினம் (15) ஆரம்பிக்கப்படும் எனவும், ஏனைய பீடங்கள் இறுதி ஆண்டு/4ஆம் ஆண்டு பரீட்சைக்காக எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்று (13) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்தார்.

இதில் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தனவும் பங்குபற்றியிருந்தார்.

மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் 22ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 15 இற்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை பீடம், கல்விப் பீடம், சட்ட பீடம், விஞ்ஞானப் பிரிவு ஆகியன இறுதியாண்டு பரீட்சைகளுக்காக ஜூன் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஜூன் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், இவ்வாறு அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பீடங்கள் ஜூன் 22ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைக்காக திறக்கப்பட்டு ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அந்தந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களும் இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக,  மாணவர்களை அழைக்கும் தினம் தொடர்பில் தனித்தனியாக அறிவிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

பரீட்சைகளின்போது, ஆசனங்களை ஒதுக்குதல், எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோக பரீட்சைகள் இடம்பெறும் வேளையில், பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படும்.

இக்காலகட்டத்தில் முடிந்தவரை மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கான வாய்ப்பு தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டுமாறு பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுஅறிவிப்பு வரை, விடுதிகளில் மாணவர்கள் தங்கும்போது, ஒரு மாணவருக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், இரவு 7.00 மணிக்குப் பின்னர் நூலகம் உட்பட, பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் அல்லது வெளியே எந்தவொரு வகையிலும் மாணவர்கள் கூடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதோடு, எந்தவொரு பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட நேர அட்டவணைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குவது தொடர்பில் அனைத்து துணைவேந்தர்களும் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, பல்கலைக்கழகத்தின் அனைத்து நிர்வாக அதிகாரிகளும் திங்கட்கிழமை (15) முதல் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் அனைத்தும் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பில் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய அனைத்து தரப்பினராலும் முழுமையாக பின்பற்றுவதற்கு கடப்பாடுடையவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனவைரஸ் பரவல் நிலை காரணமாக கடந்த மார்ச் 13ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...