யாழ். மாதகலில் 57 கி.கி. கேரள கஞ்சா மீட்பு

யாழ். மாதகல், குசுமந்துறை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட ஒருதொகை கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடற்படையினர் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறானதொரு தேடுதல் நடவடிக்கை, இன்று (12)  வடக்கு கட்டளை பிரிவின் கடற்படையினரால், யாழ். குசுமந்துறை கடற்கரையில்  மேற்கொள்ளப்பட்டது.

அவ்வேளையில், கரையை நோக்கி வந்த டிங்கிப் படகிலிருந்தவர்களால், மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில், ஏதோவொரு பொருள் கரைக்கு கொண்டு வரப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்  தொடர்ந்து, குறித்த இடத்திற்கு கடற்படையினர் சென்றபோது, மூட்டைகள் சில கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டதை அவதானித்துள்ளனர். அத்தோடு, குறித்த டிங்கி படகிலிருந்தவர்கள்,  மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர்.  

அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்குச் சென்று குறித்த மூட்டைகளை சோதனையிட்டபோது,  குறித்த மூட்டைகளில் 25  பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 57 கிலோகிராம் கேரள கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களை தேடி  குறித்த கடற்பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கையை  கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.  


Add new comment

Or log in with...