மாணவர்களின் பாதுகாப்பைப் பேணியபடி பாடசாலைகளை சீராக நடத்துவது எவ்வாறு?

பாடசாலை ஒரு சமூக ஸ்தாபனமாகும். அதில் பிரதான நுகரிகள் அல்லது பயனாளிகள் மாணவர்களாவர். அவர்களது பல்பரிமாண ஆளுமை விருத்திக்காக செயற்பட்டு வந்த பாடசாலைகள் சுமார் மூன்று மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கின்றன.

கொவிட்19 எனப்படும் கொடிய கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து முதலில் எமது எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தூரதிருஷ்டியான சிந்தனையின் அடிப்படையில் மார்ச் மாதம் 13ஆம் திகதி நாட்டிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டன.

இதனால் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இலங்கை செயற்பட்டது என்ற நற்பெயரையும் தனதாக்கிக் கொண்டது எமது நாடு. உலக சுகாதார தாபனமும் திருப்தி தெரிவித்தது.பாராட்டுத்தெரிவித்தது.

அப்படி திடீரென பூட்டப்பட்ட பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? என்பது சமகாலத்தில் கல்விச்சமுகத்தின் பேசுபொருளாக இருந்து வந்தது.இப்போது அதற்கான பதிலும் கிடைக்கப் பெற்றுள்ளது. மாணவர்களுடன், பாடசாலைகளுடன் பலரும் பல கோணங்களில் தொடர்புபட்டுள்ளனர்.பெற்றோர் முதல் பொதுப்போக்குவரத்து வரை இன்னோரன்ன பல விடயங்களுடன் அது தொடர்புபட்டது.

இன்று கொரோனா தணிந்து வருகிறது என்ற ஆறுதல் எம்மிடையே உள்ளது.எனினும் இலங்கையில் இறுதி தொற்றாளர் குணமாகும் வரை நம்ப முடியாது. கொரோனா முற்றாக நீங்கி விட்டது என்ற முடிவுக்கு வருவதற்கு காலம் எடுக்கலாம். எனவே அதற்கான முற்பாதுகாப்புடன் படிப்படியாக பாடசாலையை ஆரம்பித்தால் என்ன என்ற கருத்துகளும் இல்லாமலில்லை.

அதனிடையே இணையவழிக் கல்வி என்பது மற்றுமொரு வியாபாரமாக மாறி வருகிறது. ரியூசன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையிலுள்ளவர்களுக்கு இணையவழிக் கல்வி மேலுமொரு சவாலாக இருக்கப் போகின்றது.கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தமது பிள்ளைகளின் இணையவழிக் கல்விக்கு ரியூசன் பணத்தை வழங்குவதென்பது இன்று பெரும்பாடாக மாறி வருகிறது.

மறுபுறம் இணையவழிக் கல்வியானது கல்வியில் சமவாய்ப்பை பேணவில்லையென பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தெரிவித்திருந்தார். குறிப்பாக மலையகத்தில் அதற்கான வாய்ப்புகள் வசதிகள் குறைவு என்றும்கூறியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க முகக்கவசத்துடன் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது பொருத்தமல்ல என உளவியல் நிபுணர் ஒருவர் கருத்துரைக்கிறார். முகக்கவசமில்லாத சூழல் வந்தால் மட்டுமே பாடசாலையைத் திறக்க வேண்டும் என்பது இன்னுமொருசாராரின் கருத்தாகும். எனவே பாடசாலைகளை ஆரம்பித்தல் என்பது சிக்கல் நிறைந்த விடயம். பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற போது மாணவர்கள் தங்களைஅறியாமலே நெருங்கிப் பழக வாய்ப்புண்டு. சமூகஇடைவெளி கேள்விக்குறியாகும்.

பாடசாலைகள் ஆரம்பித்த பின்னர்தான் பரீட்சைகள் பற்றிக் கூற முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியிருந்தார்.

அதன்படி செப்டம்பர்13இல் தரம்_5 புலமைப்பரிசில்பரீட்சை நடைபெறும். அதேபோன்று க.பொ.த.உயர்தரப் பரீட்சை செப்.07ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை, முன்னாயத்தங்களை சம்பந்தப்பட்ட தரப்பினர் தற்போதே ஆரம்பித்துள்ளனர்.

அதற்கான வழிகாட்டல் கைநூல்களை கல்விஅமைச்சு 15./2020 எனும் கூற்றுநிருபத்தினுடாக வெளியிட்டுள்ளது.

அதற்கு முன்னோடியாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்தா நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு அங்குள்ள மாகாண கல்விப்பணிப்பாளர் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடி களநிலைவரங்களையும் அவர்களது திட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

அதற்கிணங்க பாடசாலைகளை 4 கட்டங்களாக சுகாதார நடைமுறைகளைப் பேணி திறப்பது என்று முடிவானது.

அதன்படி ஜூன் 29ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களாக பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளர்.

கல்வி அமைச்சில் செவ்வாயன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

(மிகுதி அடுத்த வெள்ளி)

 


Add new comment

Or log in with...