யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் பசுமைப் புரட்சி

தரிசு நிலங்களில் காய்கறிச் செய்கை: கொரோனா காலப் பகுதியில் வறிய மக்களுக்கு இலவச உதவி

யாழ்ப்பாணப்

பல்கலைக்கழகம் தமிழ் மக்களது வாழ்வியலுடன் ஒன்றிணைந்தது என்பதை காலத்துக்குக் காலம் பல்கலைக்கழக மாணவர்கள்

நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்களது ஒவ்வொரு

பிரச்சினையிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுத்து அதில் தமது பங்களிப்பை வழங்கி

வருகின்றார்கள்.

மக்களின் பிரச்சினைகளில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தாமும் ஒருவராக நின்று அதில் பங்கெடுத்துள்ளார்கள்; அதற்காகக் குரல் கொடுத்தும் வருகின்றார்கள்.

அவ்வாறு தமிழ் மக்களது வாழ்வியலோடு பங்கெடுத்துக் கொள்கின்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், தற்போது மீண்டும் மக்களின் பிரச்சினை ஒன்றைத் தீர்த்து வைப்பதற்கு முன்வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.ஆனால் இந்த அறிவித்தலுக்கு முன்னரே அதற்கான தேவையை உணர்ந்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் அதற்கான பணியில் இறங்கியிருந்தார்கள். இதற்காக பல இடங்களிலும் காணிகளைத் தேடிய நிலையில் கீரிமலை, கரும்பனை பகுதியில் ஒருவர் தனது 10 பரப்பு காணியை இதற்கென வழங்கியுள்ளார். இதனையடுத்து அக்காணியை பல்கலைக்கழக மாணவர்கள் துப்புரவு செய்து அதில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு விவசாயம் செய்து பெற்ற மரக்கறிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இலவசமாகப் பகிர்ந்தளித்து முன்மாதிரியாக செயற்பட்டுள்ளனர் அம்மாணவர்கள்.

கொரோனா காலத்தில் இணையவழி கற்றல் மேற்கொள்ளும் வகையில் தொலைபேசிகளில் பாடங்கள் தொடர்பான விளக்கங்களைக் கேட்டுக் கொண்டும், அதேநேரம் தோட்டத்தில் வரம்பு கட்டி நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அம்மாணவர்களை தினகரன் வாசகர்களுக்காக சந்தித்துப் பேசினோம்.

"கொரோனாவுக்கு முதலே இது போன்ற விவசாயம் மேற்கொள்ள வேண்டும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வருமானம் குறைந்த மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டம் எம்மிடம் இருந்தது. அது தொடர்பாக முன்னர் இருந்த வடமாகாண ஆளுநருடன் பேசியிருந்தோம். அவர் எமக்கு காணி பெற்றுத் தருவதாக கூறியிருந்தார். எனினும் அவர் பதவியில் இருந்து சென்றதனால் காணி கிடைக்காமல் போய் விட்டது.

அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு ஏற்பட்ட போது நாம் மீண்டும் எமது திட்டத்துக்கு புத்துயிர் கொடுத்தோம். இதற்காக பல இடங்களில் காணி தேடினோம். வசாவிளான் பகுதியில் ஓர் பெரிய காணி கிடைத்தது. எனினும் கடைசி நேரத்தில் சில பிரச்சினைகள் காரணமாக எமக்கு அவர்கள் அக்காணியைத் தரவில்லை.

இதனால் எமது திட்டம் மீண்டும் ஒரு மாத காலத்துக்குத் தடைப்பட்டது. எனினும் நாம் தொடர்ந்தும் காணி தேடினோம். அத்துடன் எமது பல்கலைக்கழக நண்பர் ஒருவரது தந்தையின் 10 ஏக்கர் மிளகாய் காணியில் அவரது தந்தையுடன் இணைந்து நாம் மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டோம். அதன் அறுவடையின் போது பல்கலைக்கழக கலைப்பீட மாணவிகளே உதவி செய்திருந்தார்கள்.

அதன் பின்னரே இப்பகுதியில் தனது 10 பரப்புக் காணியை மூன்று ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு ஒருவர் முன்வந்தார். இந்தக் காணி பயன்பாடு அற்ற நிலையில் பற்றைகள் வளர்ந்து இருந்தது. நாம் அதனைப் பொறுப்பேற்று துப்புரவு செய்து எமது விவசாயத்தை ஆரம்பித்தோம்"என்கிறார்கள் அம்மாணவர்கள்.

கேள்வி: இந்தக் காணிகளை துப்புரவு செய்வதற்கும், பயிர்ச் செய்கைக்கும் தேவையான ஆரம்ப செலவை மேற்கொள்ள யாரேனும் உதவி செய்தார்களா?

பதில்: முதலில் காணியை பதிவு செய்வதற்கு எமது நண்பர்களே உதவி செய்தார்கள். பின்னர் நாம் தன்னார்வலர்களிடம் உதவி கேட்டோம். பலர் உதவி செய்தார்கள். ஒருவர் செய்த உதவியிலேயே இக்காணியை துப்புரவு செய்வதற்குஏற்பட்ட 22 ஆயிரம் ரூபா செலவை ஈடு செய்தோம். அது போன்று இக்காணியில் மிளகாய் பயிரிடுவதற்குத் தேவையான பயிர்களையும், அதனை பராமரிப்பதற்கான அனைத்து செலவுகளை வழங்குவதாக ஒருவர் முன்வந்துள்ளார்.மற்றுமொரு சமூக சேவையாளர் நீர் இறைக்கும் இயந்திரத்தை வழங்கியுள்ளார்.ஆனால் ஒரு சிலர் எம்மை அலட்சியப்படுத்தினார்கள்.

கேள்வி: எவ்வாறான மரக்கறிகளைப் பயிரிட்டுள்ளீர்கள்?

பதில்: கீரை, கத்தரி, பூசணி, பயற்றை போன்றன. அது தவிர சில மரக்கறிகளை நாற்று மேடையாக வைத்துள்ளோம். அவை சற்று வளர்ந்ததும் வீட்டுத் தோட்ட செய்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளோம்.

கேள்வி: விவசாயத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் போன்றவற்றிடம் நீங்கள் உதவிகள் கேட்டீர்களா?

பதில்: அவர்களிடம் நாம் இது தொடர்பாகப் பேசினோம். எனினும் அவர்கள் அவ்வாறு இலவசமாக வழங்குவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை எனக் கூறினார்கள். இருந்த போதிலும் குறைந்த கட்டணத்தில் எமது தோட்டத்தை உழுது தருவதற்கு உதவி செய்தார்கள். அத்துடன் மானிய விலையில் நாற்றுக்களையும் வழங்கினார்கள்.

கேள்வி: அறுவடையை என்ன செய்தீர்கள்?

பதில்: கொரோனா ஊரடங்கு நீடித்தால் இதனை மிக வறிய மக்களுக்கு வழங்குவதாக இருந்தோம். ஏனேனில் எவ்வளவோ பேர் உழைப்பின்றி அரசாங்கம் கொடுத்த நிவாரண நிதியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் காய்கறிகளை ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வறிய மக்களுக்கு இலவசமாக கொடுத்தோம். நாம் ஊர்காவற்றுறையை தெரிவு செய்ததற்குக் காரணம், அங்கு மரக்கறிகள் கிடைப்பது இல்லை. அங்கு அவை பயிரிடப்படுவதும் இல்லை. கொடுத்தது போக எஞ்சிய கீரையை விற்பனை செய்துள்ளோம்.

கேள்வி: தொடர்ந்து இதனை செய்வதற்கு திட்டம் உள்ளதா?

பதில்: ஆம். நாம் இதனை செய்ய தொடங்கும் போதே எமது பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்களுக்கும், வவுனியா வளாக மாணவர்களுக்கும் கூறினோம். அங்கும் இது போன்று செய்யுமாறு தெரிவித்தோம். எனினும் அவர்களிடம் போதுமான ஆட்பலம் இல்லாமையால் அதனை இன்னும் ஆரம்பிக்கவில்லை.

அத்துடன் இதனை நாம் தொடர்ச்சியாகச் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தினை எமது 'வித்துக்கள்' அமைப்பினுடாக வருமானம் குறைந்த மாணவர்களது கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்தவுள்ளோம். அது தவிர, இதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் புத்தாக்க மாணவர்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக பாடசாலை மட்டத்தில் புத்தாக்க கண்காட்சிப் போட்டிகளை நடத்தவுள்ளோம். அதில் தெரிவு செய்யப்படும் சிறந்த மாணவர்களுக்கு தேவையான சகல கற்றல் உதவிகளையும் வழங்கி அவர்களது திறமையை புத்தாக்க தொழிநுட்ப புரட்சிக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். இது தொடர்பாக எமது பல்கலைகழக தொழில்நுட்ப பீட, விஞ்ஞான பீட மாணவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

கேள்வி: அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் தொடர்பாக உங்களது கருத்து?

பதில்: அது நல்லதொரு திட்டம். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உள்ளூரில் வேலைவாய்ப்புகளும் ஏற்படும்.

கேள்வி: அரசாங்கம் உங்களுக்கு எவ்வாறான உதவிகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: நாம் இப்போது இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மஞ்சளையே பயன்படுத்துகின்றோம். ஆனால் இப்பிரதேசத்தில் மஞ்சள் பயிரிட முடியும். எனவே அவ்வாறு பணப் பயிர்களையும், வருவாய் தரக் கூடிய பயிர்களையும் பயிரிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்தால் அதனை நாம் மேற்கொள்வதற்குத் தயாராகவுள்ளோம். அத்துடன் எமக்கு மானிய அடிப்படையில் அல்லது இலவசமான விவசாய உதவிகளை வழங்குவதன் மூலமும் எமக்கு அது ஊக்குவிப்பாக அமையும்.

"இதுவரை காலமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வெறுமனே அரசியல் சார்பு போராட்டங்களில்தான் ஈடுபடுகின்றார்கள்" என்ற விமர்சனங்களை முன்வைக்கப்படுகின்றதல்லவா?" எனக் கேட்ட போது "நாம் மக்களது ஒவ்வொரு பிரச்சினையிலும் பங்கெடுத்து அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம்" என்றார்கள் அம்மாணவர்கள். இன்று உலகமே இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. அத்தகைய இளைஞர்களது சக்தி இதுபோன்ற நல்ல காரியங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதையே சமூகம் எதிர்பார்க்கின்றது.


Add new comment

Or log in with...