பிரித்தானியாவிலிருந்து 278 பேருடன் விசேட விமானம்

இலங்கைக்கு வர முடியாமல், பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 278 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமொன்று, லண்டன் நகரிலிருந்து இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 504 எனும் விசேட விமானம் மூலம் இப்பயணிகள் இன்று அதிகாலை 2.51 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகளும், விமானப் பணியாளர்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், PCR பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களின் இப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டியுள்ள  04 ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கு, விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சோதனைகளின் முடிவுகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம், இவ்விமானப் பயணிகளிடமிருந்து மாதிரியை பெற்று, 24 மணித்தியாலங்கள் எடுக்கும் என,குறித்த சோதனையை மேற்கொண்ட வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விமானப் பயணிகளில் எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையிலோ அல்லது, IDH வைத்தியசாலையிலோ அனுமதிக்கப்படுவார்கள். ஏனைய விமானப் பயணிகள், 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 

 


Add new comment

Or log in with...