கடைசி ஒரு இலங்கையர் வரை நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்

எதிர்க்கட்சி குறுகிய அரசியல் இலாபம் தேட முயற்சி

நாட்டுக்கு திரும்பும் எதிர்பார்ப்பில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் கைவிடவில்லை என்றும் இறுதி இலங்கையர் வரை அனைவரையும் அழைத்து வருவதே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தினதும் நோக்கமாகுமென சிவில் விமான சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதுவரை நாடு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் அமைப்பு ரீதியான வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய சிலரும் அது தொடர்பில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் நாட்டில் நிலவும் சூழ்நிலையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி அதன்மூலம் குறுகிய அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்ளும் உள் நோக்கத்துடனேயே அவர்கள் செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 143 நாடுகளில் 38,983 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் கடந்த மார்ச் 19ஆம் திகதி விமான நிலையம் மூடப்பட்ட தினத்திலிருந்து இதுவரை இருபத்தொரு நாடுகளில் தங்கியிருந்த பத்தாயிரத்துக்கு அதிகமான இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றவர்கள் பயிற்சிகளுக்காக சென்ற அரச அதிகாரிகள் அவர்களது பராமரிப்பில் உள்ளவர்கள் ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...