பொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு

சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைபோன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார். பொதுப் போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி பேச்சுவார்த்தையில் இலங்கை போக்குவரத்து சபையின் முக்கியஸ்தர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேற்படி பேச்சுவார்த்தையின்போது ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டு வரும்போது எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது தெளிவுபடுத்திய அமைச்சர் மஹிந்த அமரவீர,

தற்போது நாட்டில் 5,300 இ.போ.ச பஸ்கள் மற்றும் 23,000 தனியார் பஸ்கள் உள்ள நிலையில் சுகாதாரத்துறை ஆலோசனைகளை பின்பற்றி பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு எந்த வகையிலும் இந்த எண்ணிக்கை போதாது. ஆசனங்களின் எண்ணிக்கையின் படியே பயணிகள் உள்வாங்கப்படுவர். அத்தகைய நிலையில் பயணிகள் பஸ்களில் மற்றும் ரயில்களில் நின்று கொண்டு செல்வதற்கு முயற்சிப்பர்.

இந்த நிலையை கருத்தில் கொண்டு தற்போது தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மேலதிகமாக பாடசாலை போக்குவரத்து பஸ்கள், சுற்றுலா மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் பஸ் வண்டிகள் மற்றும் பதிவு செய்வதற்காக காத்திருப்பிலுள்ள அனைத்து பஸ் வண்டிகளையும் தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க அவ்வாறான பஸ் வண்டிகளை இன்றையதினம் தற்காலிகமாக பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக அவற்றை பதிவு செய்து கொள்ள முடியும்.

அதேவேளை ரயில்களில் தினமும் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் பயணிகள் பயணிக்கவுள்ள நிலையில் மொத்தமாக ரயில்களில் 25,000 ஆசனங்களே உள்ளன. இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தை மிக அவசியமான காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்துமாறு அமைச்சர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)


Add new comment

Or log in with...