லத்தீன் அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு ஒரு மில்லியனை எட்டியது | தினகரன்

லத்தீன் அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பு ஒரு மில்லியனை எட்டியது

லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் ஒரு மில்லியனைத் தாண்டி இருப்பதோடு வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படாத நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட பிரிட்டன் மற்றும் ரஷ்யாவில் நேற்று முடக்க நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக உலகெங்கும் அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில், கொவிட்-19 தொற்று தற்போது 6.1 மில்லியன் பேரை பாதித்திருப்பதோடு உயிரிழப்பு 371,000 ஐ தாண்டியுள்ளது.

இதில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் அரை மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அலட்சியமாக செயற்படுவதோடு முன்னெடுக்கப்பட்டு வரும் முடக்க நிலைக்கும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்.

தலைநகர் பிராசிலியாவில் திரண்ட கூட்டம் ஒன்றில் முகக் கவசம் இன்றி பங்கேற்ற அவர், கூட்டத்துடன் சேர்ந்து ‘கட்டுக்கதை’ என்று வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக கோசம் எழுப்பினார்.

பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக 480 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,314-ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் நான்காவது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் மட்டுமே உலக அளவில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

எனினும் பிரேசில் மாத்திரம் அன்றி லத்தீன் அமெரிக்காவில் சிலி, பொலிவியா மற்றும் பெரு நாடுகளிலும் கொவிட்-19 தீவிரம் அடைந்துள்ளது.

தென் அமெரிக்காவுக்கு அப்பால் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பகுதிகளில் இந்த வைரஸ் தொற்று முழு வீச்சில் தாக்குவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றியுள்ளன. மோசமாக பாதிக்கப்பட்டிருந்த ஐரோப்பாவில் அவதானத்துடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதோடு மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி வருகின்றனர்.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து அல்லது திறன்மிக்க சிகிச்சை முறைகள் இன்னும் இல்லாத சூழலில் முடக்க நிலை தளர்த்தும் நடவடிக்கைகள் அளவுக்கு அதிகமாக விரைவு படுத்தப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டன் பாடசாலைகள் நேற்று பகுதி அளவு மீண்டும் திறக்கப்பட்டதோடு, இது கூடிய விரைவு கொண்ட நடவடிக்கை என்று மூத்த அரச ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“இங்கிலாந்தில் முடக்க நிலை தளர்த்தப்பட்டால் கொவிட்-19 வேகமாக பரவும்” என்று அவசர நிலைக்கான அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலாசனைக் குழு உறுப்பினரான ஜெரமி பரார் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய வாரங்களில் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் கடைத்தொகுதிகள் மற்றும் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் அங்கு இன்னும் நோய்த் தொற்று சம்பவங்கள் உச்ச நிலையில் உள்ளன.

 


Add new comment

Or log in with...