தேர்தலுக்கு எதிரான விசாரணை; ஏற்பதா? இல்லையா? | தினகரன்

தேர்தலுக்கு எதிரான விசாரணை; ஏற்பதா? இல்லையா?

இன்று நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

பாராளுமன்றத்தை கலைத்து,  தேர்தலை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பு  இன்று வழங்கப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 05 நீதிபதிகள் கொண்ட நீதியரசர்கள் குழாம் இன்று மாலை மூன்று மணிக்கு இதற்கான தீர்ப்பை வழங்குமென உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது.

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த மனுக்கள் தொடர்பிலான பரிசீலனை நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பரிசீலனையின் போது மனுதாரர் சார்பிலும் பிரதிவாதிகள் தரப்பிலான இடையீட்டு மனுக்கள் சார்பிலும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.

மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சிரேஷ்ட சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்து மனுதாரர் தரப்பின்  நியாயங்களை தெளிவுபடுத்தினர். மனுதாரர் தரப்பில் இறுதி பதிலளிக்கும் வாதத்தை  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நேற்று முன்வைத்தார்.

சட்ட மாஅதிபர் தரப்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தெமுனி டி சில்வா, பல விடயங்களை சுட்டிக்காட்டி இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் முற்றாக நிராகரிக்க வேண்டுமென வாதிட்டார்.

நேற்றைய இறுதி பரிசீலனைக்கு  பின்னர் இந்த விவாதங்களை ஆய்வுசெய்து மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா? நிராகரிப்பதா? என்ற தீர்ப்பை இன்று மாலை 03.00 மணிக்கு அறிவிப்பதாக உச்சநீதிமன்றத்தின் 05 நீதிபதிகளை கொண்ட குழு தெரிவித்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்கள் புவனெக அலுவிகார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, விஜித மலல்கொட ஆகியோர் அடங்கிய குழாம் இந்த மனுக்களை கடந்த 10 நாட்களாக பரிசீலித்தது.

இந்த மனுக்களில், தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, சட்ட மாஅதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை கலைத்தமை, தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்தமை தொடர்பில் சட்ட வலுவற்றதாக கருதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், இந்த மனுக்கள் நியாயமற்றதென தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பினர் சகல மனுக்களையும் முற்றாக நிராகரிக்க வேண்டுமென தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் நேற்றைய  இறுதிக்கட்ட விவாதங்களையடுத்து இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா? அல்லது நிராகரிப்பதா? என்ற தீர்மானத்தை உச்சநீதிமன்றம் இன்றைய தினம் அறிவிக்கவிருக்கின்றது.

இதன் பிரகாரம் உச்சநீதிமன்றம் இந்த மனுக்களை விசாரணைக்கு எடுப்பதற்கு தீர்மானிக்குமானால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட கூடிய நிலை ஏற்படலாம். அதற்கான இடைக்கால  தடையை உச்ச நீதிமன்றம் விதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

எம். ஏ. எம். நிலாம்


Add new comment

Or log in with...