புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதே தற்பொழுது நாட்டின் பிரதான தேவை | தினகரன்

புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதே தற்பொழுது நாட்டின் பிரதான தேவை

புதிய பாராளுமன்றத்தை கூட்டுவது தான் தற்பொழுது நாட்டின் பிரதான தேவையாக உள்ளது. பழைய பாராளுமன்றத்தை கூட்டும் தேவை கிடையாதென முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கான பச்சைக் கொடி காட்டப்பட்டாலும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது. புலிகளால் கூட 03 மணி நேரத்தில் 08 குண்டுகளை வெடிக்கவைக்க முடியாது போனது.

அவர்கள் மதஸ்தலங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்கள். தெஹிவளை மிருகக் காட்சிசாலை மீதும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. யார் பணம் கொடுத்து தாக்குதலுக்கு தூண்டினார்கள். இதற்கு யார் பொறுப்பு? என கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசில் உண்மையை மறைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்புள்ள தரப்பினரை பாதுகாத்தார்கள். இது தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அரசியல் இலாபத்திற்காக சர்வதேச சமூகத்திற்கு கடந்த அரசு வாக்குறுதிகளை அளித்தது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் சட்டத்தை வாபஸ்பெற்றார்கள்.

இவற்றை மீள செயற்படுத்த புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

தேர்தல் நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கே உள்ளது.தேர்தலை ஒத்திவைக்கவோ தடுக்கவோ இது வரை நீதிமன்றத்தினால் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. வேட்பாளர் இலக்கம் வழங்குவதை நிறுத்துமாறும் கோரப்பட்டது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்குள்ள கௌரவம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது.

தேர்தல் நடத்தக் கூடிய உகந்த சூழல் உள்ளதா? இல்லையா? என சுகாதார தரப்பினால் தான் சரியான முடிவுக்கு வர முடியும். அவர்கள் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர். தேர்தல் நடத்துவது தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. ஒரு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக சகல முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். ஆணைக்குழுவின் உள்ளகப் பிரச்சினையை தீர்த்துக் கொண்டே நீதிமன்றத்திற்கு ஆணைக்குழு தமது பக்க நியாயத்தை முன்வைக்க வேண்டும்.(பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...