நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேம்படுத்தப்பட்ட ICU பொதுமக்களிடம் கையளிப்பு | தினகரன்


நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேம்படுத்தப்பட்ட ICU பொதுமக்களிடம் கையளிப்பு

நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேம்படுத்தப்பட்ட ICU பொதுமக்களிடம் கையளிப்பு-Dialog Axiata Gifts Fully-functional ICU at Negombo General Hospital to the Public
இடமிருந்து வலமாக: சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளர், வைத்தியர் எஸ். எச். முனசிங்க, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் காஞ்சன ஜயரத்ன, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர்/ குழு தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்க, மற்றும் ஆசிஆட்டா குழும பெர்ஹாட் பிரதான நிறைவேற்று அதிகாரி - தொலைத்தொடர்பு வர்த்தக மற்றும் நிர்வாக பிரதித் தலைவர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஒரு மாத காலப்பகுதிக்குள், நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் பரிபூரண செயல்பாட்டுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவொன்றை (ICU) நிறுவுவதற்கான உடனடி சிவில் மறுகட்டுமானம் மற்றும் உபகரணங்களை வழங்கி சிவில் புனரமைப்பை நிறைவு செய்துள்ளது.

இது, COVID-19 தொற்றுநோய் பரவலின் போது சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்தால் (MOH) தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவசரமாக தேவைப்படும் ICU பிரிவு மேம்பாட்டிற்கென டயலொக் ஆசிஆட்டாவினால் உறுதியளிக்கப்பட்ட ரூ. 2000 இலட்சம் திட்டத்தின் முதற்கட்டத்தை நிறைவு செய்த நிகழ்வாகும்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேம்படுத்தப்பட்ட ICU பொதுமக்களிடம் கையளிப்பு-Dialog Axiata Gifts Fully-functional ICU at Negombo General Hospital to the Public

டயலொக் ஆசிஆட்டா உருவாக்கிய ICUவின் பரிபூரண செயல்பாடு பற்றிய விளக்கம் அளிக்கப்படுகின்றன

டயலொக் ஆசிஆட்டா முழுமையாக நிதியளித்துள்ள, சிவில் மறு கட்டுமானம் மற்றும் critical ICU வின் மேம்பாட்டுத்திட்டத்தினால், மருத்துவமனையின் வசதிகளை உயர்த்துவதனூடாக அதிக நோயாளர்களுக்கு சேவையளிக்கும் நோக்கில், பரிபூரண செயல்பாட்டுடன் கூடிய ICU கட்டிடமொன்றை,  மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவு (MICU), அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளடக்கிய 10 புதிய படுக்கைகளை கொண்ட அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு (SICU) ஆகியவற்றுடன் நிறுவியுள்ளது.

டயலொக் ஆசிஆட்டாவினால் இந்த ICU மேம்பாட்டுத்திட்டமானது, அனுமதிக்கப்பட்ட சிக்கலான நோயாளர்களுக்கு நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க மேலும் உதவுவதோடு, கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்கள் மீதான சுமையினை குறைக்கவும் உதவும். மேலும் தீவிர சிகிச்சை வழங்கலில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் அதிக பங்காற்றும். அந்த மாவட்டத்தில் வழங்கப்படும் சுகாதார சேவை அமைப்புகளை மேம்படுத்த ஒரு ஊக்கியாகவும் இது செயல்படும்.

இதுகுறித்து, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகளுக்கான அமைச்சர், கௌரவ பவித்ரா வன்னிஆராய்ச்சி அவர்கள் கருத்துதெரிவிக்கையில் - "இந்த மருத்துவமனைக்கு பரிபூரண செயல்பாடுகொண்ட ICUவினை வழங்க டயலொக் ஆசிஆட்டா பெரும் முயற்சிகளை எடுத்தது. ICU வளாகத்தின் நிர்மாணப் பணிகள் 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட இந் நிகழ்வினை, வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக குறிக்க முடியும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நான் டயலொக் இற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். COVID-19 தொற்றுநோய்ப் பரவலின்போது மேற்கொள்ளப்பட்ட உயிர் காக்கும் முயற்சிகளைப் போலவே, டெங்கு காய்ச்சல் போன்ற பொதுவான கடுமையான நோய்களிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

கட்டிமுடிக்கப்பட்டுள்ள பரிபூரண செயல்பாடுகொண்ட இந்த ICU வளாகம் அதற்கான நீண்டகால வாய்ப்பாக அமையும். எனவே, டயலொக் ஆசிஆட்டாவின் தொடர்சியான இந்த முயற்சிகளுக்கும், இந்த முக்கியமான நேரத்தில் மருத்துவமனைக்காக அர்ப்பணிப்பு சேவையில் ஈடுபட்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம் ” என்றார்.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ். எச். முனசிங்க அவர்கள் கூறுகையில், “ஒரு நபரின் ஆரோக்கியமே அவர்களின் மிகப்பெரிய செல்வமாகும். பொது நலனில் பெரிதும் பங்களிக்கும் ஒரு நிறுவனத்தின் திறனை டயலொக்கின் மகத்தான முயற்சிகள் நமக்குக் காட்டுகின்றன, இதன் விளைவாக அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தில் அதிக செழிப்பை உருவாக்குகின்றன.

தற்போதைய  சூழலில் தேவையை உணர்ந்து இந்த மாவட்ட மருத்துவமனையில் பரிபூரண செயல்பாட்டுடன் கூடிய ICU வளாகத்தினையும் நீண்ட காலம் இயங்கக்கூடிய நேரடி உயிர் காக்கும் நடவடிக்கைகளுக்கான வசதியையும் உருவாக்கித் தந்த இவர்களின் நல்லெண்ணத்திற்காக டயலொக் நிறுவனத்திற்கு நிறைந்த ஆசிர்வாதங்கள் சேரும்" என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், "நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் முக்கியமான ICU நிர்மாணத்தை ஒரு மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்யக்கிடைத்தமைக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சுகாதாரசேவை வழங்குனர்களின் நேரடி உயிர் காக்கும் நடவடிக்கைகளுக்கு மேலும் ஆதரவளிப்பதற்கான எங்கள் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். நிறைவடைந்த இந்த திட்டமானது, நாட்டின் சுகாதார அமைப்புகளை ஆதரிப்பதற்கும் விரிவாக்குவதற்கும் டயலொக் உறுதியளித்த ரூ. 2000 இலட்சம் பெறுமதிகொண்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, பொது மக்களுக்கு தீவிர சிகிச்சைக்கான அணுகலை கணிசமாக அதிகரிப்பதுடன், நெருக்கடி காலத்தில் கோவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், தேவைப்படும் மற்ற அனைத்து நோயாளர்களுக்கும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் உதவும்.” என்றார்.

மேலும், டயலொக் ஆசிஆட்டா வழங்கிய ரூ. 2000 இலட்சம் உறுதி மொழிக்கு அமைய இரண்டாம் கட்டமாக, ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் பரிபூரண செயல்பாட்டுடன் கூடிய ICU ஐ நிறுவவுள்ளது. இந்த முயற்சிகள் நாட்டின் சுகாதார அமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான டயலொக்கின் நோக்கத்தில் ஒருங்கிணைந்த மைல்கற்கள் ஆகும், இது முக்கியமான பராமரிப்பு சேவைகளை வழங்குவதோடு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சைக்கான அணுகலையும் வழங்க உதவும்.


Add new comment

Or log in with...