சொய்சாபுர உணவக துப்பாக்கிச்சூடு; STF இனால் ஒருவர் கைது

சொய்சாபுர உணவக துப்பாக்கிச்சூடு; STF இனால் ஒருவர் கைது-Soysapura Restaurant Shooting-One Suspect Arrested

2018இல் மாநகரசபை உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிணையில் விடுவிக்கப்ப பிரதான சந்தேகநபர்

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் வாள் வெட்டு தாக்குதல் தொடர்பான சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (29) கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத குழுவினர், தன்னியக்க துப்பாக்கி மூலம் குறித்த உணவகம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இச்சம்பவத்தில் குறித்த உணவத்தின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. 

சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்து அப்பகுதியில் கடமையிலிருந்த, பொலிஸார் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நேற்று (30) இரவு 8.00 மணியளவில் பாணந்துறை, எலுவில பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 2018ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான வழக்கின் முக்கிய சந்தேகநபர் ஆவார் என்பதோடு, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 34 வயதான, மொரட்டுவ, அங்குலான, சமுத்திராசன்ன வீதி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரிடமிருந்து, கையடக்க தொலைபேசி மற்றும் சிம் கார்ட் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை இன்றையதினம் (31) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...