கண் முன்னே துப்பாக்கிச் சூடு; கடமையிலிருந்த பொலிஸார் இடைநிறுத்தம் | தினகரன்

கண் முன்னே துப்பாக்கிச் சூடு; கடமையிலிருந்த பொலிஸார் இடைநிறுத்தம்

கண் முன்னே துப்பாக்கிச் சூடு; கடமையிலிருந்த பொலிஸார் இடைநிறுத்தம்-3 Police Personnel Interdicted For Not Taking Any Action on a Shooting Incident at Mt Lavinia

- SSP உடன் இணைந்து வெற்று கோப்புகளை தேடுமாறு தொலைபேசி அழைப்பு
- கப்பம் கோரி துபாயிலிருந்து மிரட்டல்; கொலை அச்சுறுத்தல்

கல்கிஸ்ஸை பிரதேசத்திலுள்ள உணவகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், அங்கு கடமையிலிருந்த மூன்று பொலிசார் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், குறித்த இடத்தில் பாதுகாப்புக் கடமையிலிருந்த கல்கிஸ்ஸை  பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியதன் மூலம் தங்களது கடமையை புறக்கணித்த குற்றச்சாட்டில் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு (29) கடந்து 12.20 மணியளவில் கல்கிஸ்ஸை, சொய்சாபுர பிரதேசத்தில், சொய்சாபுர விளையாட்டுமைதான திசையிலிருந்து காரொன்றில் வந்த குழுவினர், குறித்த ஹோட்டலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு, மொரட்டுவை திசை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஹோட்டலின் கண்ணாடிகளே சேதமடைந்ததாகவும், சந்தேகநபர்கள் தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது, சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் வேளையில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டு, அங்கு கடமையில் இருந்த கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (29) முதல் இவர்கள் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஹோட்டல் உரிமையாளரிடம் பாதாள குழுவொன்றைச் சேர்ந்த ஒருவர் வந்து, அரிசி கொள்வனவு செய்வதற்காக ரூபா 5 இலட்சம் தருமாறு கப்பம் கோரியுள்ளார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குழுவினர் கார் ஒன்றில் வாள்களுடன் வந்து கடையைத் தாக்கியுள்ளதோடு, கடையிலுள்ளவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் துபாயிலிருந்து தொலைபேசி அழைப்பு எடுத்த நபர் ஒருவர், கடையை தொடர்ந்து நடாத்த வேண்டுமானால் ஒரு கோடி ரூபா கப்பம் தருமாறு  உணவக உரிமையாளரிடம் கோரியுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 3 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் (29) நள்ளிரவு கடந்து 12.20 மணியளவில், மீண்டும் கார் ஒன்றில் வந்த குறித்த குழுவினர் T56 துப்பாக்கியால் சராமரியாக சூடு நடத்தியுள்ளனர். இதன்போது குறித்த ஹோட்டலுக்கு முன்னால் பொலிஸார் கடமையிலிருந்த போதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் துபாயிலிருந்து தொலைபேசி அழைப்பை எடுத்த குறித்த சந்தேகநபர், தான் வழங்கிய முன்னோட்டம் (Trial) எவ்வாறு இருந்தது எனத் கேட்டதோடு, இரண்டு T56 மற்றும் 9mm பிரவுனின் ஒன்றின் மூலம் துப்பாக்கிச்சூடு நடாத்தியதாகவும் தொலைபேசியில் தெரிவிப்பதை உணவக உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். பொலிஸ் SSP உடன் இணைந்து துப்பாக்கி ரவைகளை தேடி எடுக்குமாறும் தொலைபேசியில் அழைத்தவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முடிந்தால் தன்னிடமிருந்து உயிர் பிழைக்குமாறும் எச்சரிகை விடுத்துள்ளார்.

இந்நிலையில், பாதாள குழுக்களிடமிருந்து பாதுகாப்பாக வாழும் சூழலை ஏற்படுத்தித் தருமாறு, தாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Video Courtesy: AdaDerana


Add new comment

Or log in with...