ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம் சீன பாராளுமன்றத்தில் ஒப்புதல் | தினகரன்


ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம் சீன பாராளுமன்றத்தில் ஒப்புதல்

ஹொங்கொங் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்குச் சீன பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீன பாராளுமன்றத்தைச் சேர்ந்த 2,800க்கும் அதிகமான உறுப்பினர்கள் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிரிவினையைத் தூண்டுதல், அடக்குமுறை, பயங்கரவாதம், வெளிநாட்டு உதவியுடன் செயல்படுவது ஆகியன அதன் மூலம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படும்.

அதேபோன்று இந்த சட்டத்தின் மூலம் சீனா தனது பாதுகாப்பு நிறுவனங்களை முதல் முறை இந்தப் பிராந்தியதல் நிறுவ வாய்ப்பு எற்படும்.

சீனா, ஹொங்கொங் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஹொங்கொங்கின் சுதந்திரத்திற்குப் புதுச் சட்டம் மிரட்டலாக இருக்காது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் இதனை ஒட்டி ஹொங்கொங்கில் ஏற்கனவே மற்றொரு சீன எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது. சீன தேசிய கீதத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் மற்றொரு சட்டம் ஹொங்கொங் சட்டமன்றத்தில் கடந்த புதன்கிழமை விவாதத்திற்கு வந்தபோது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இதன்போது பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்ட மன்றத்தில் நேற்றும் விவாதம் நீடித்த நிலையில் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் தற்போது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருப்பதோடு வரும் ஓகஸ்ட் மாதம் சட்டமாக அமுல்படுத்தவாய்ப்பு உள்ளது.

இந்த சட்டமூலத்தின் முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் தேவை ஏற்படும்போது தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தொடர்புடைய பணிகளை நிறைவேற்ற ஹொங்கொங்கில் சீன மத்திய அரசின் தொடர்புடைய தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் நிறுவப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த நிறுவனங்கள் ஹொங்கொங்கில் அந்த நகருக்கான சட்டத்திற்கு பதில் அங்கு சீன சட்டங்களை அமுல்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் கையளிக்கப்பட்டபோதும், அந்த நகருக்கான சிறிய அடிப்படைச் சட்டத்திற்கு சீனா ஒப்புக்கொண்டது.

இதனால் சீன பெருநிலத்தில் இல்லாத சுதந்திரம் ஹொங்கொங் மக்களுக்கு உள்ளது.

ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கவகை செய்யும் சட்ட திருத்தத்தை எதிர்த்து, கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

எனினும் ஒட்டுமொத்த ஹொங்கொங்கையும் உலுக்கிய இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஹொங்கொங் நிர்வாகம் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்தத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...