பிரார்த்தனைகளும் அல்லாஹ்வின் பதில்களும் | தினகரன்


பிரார்த்தனைகளும் அல்லாஹ்வின் பதில்களும்

இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அருளாகவும் ஒரு இறை விசுவாசியின் சிறந்த ஆயுதமாகவும் பிரார்த்தனை (துஆ) அமைந்துள்ளது. பிரார்த்தனை என்பது வணக்கத்தின் அடிப்படை, அது ஓர் இறை விசுவாசியின் ஆயுதம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையை வென்று எடுத்த ஒரு சிறந்த வணக்கமாக இருக்கின்ற பிரார்த்தனை ஒருபோதும் வீணாகுவதில்லை. ஆனால் அந்த பிரார்த்தனைக்கு அல்லாஹ்விடமிருந்து வரும் பதில்கள் வித்தியாசமான வடிவங்களை பெறமுடியும்.

01. நேரடிப் பதிலளிப்பு.
02. எமக்கு மிகச் சிறந்ததை வழங்குவதன் மூலம் பதிலளிப்பு.
03. மறுமை நாளில் அதற்கான பதிலளிப்பு.

1. நேரடிப் பதிலளிப்பு

ஒரு அடியான் அல்லாஹ்விடம் ஒரு குறிப்பிட்ட விடயத்தை முன்வைத்து பிரார்த்தனை செய்கின்ற போது அவனது பிரார்த்தனையை அங்கீகரித்து அதற்கான  பதிலை அல்லாஹ் நேரடியாக வழங்குகின்றான். அந்தப் பதிலளிப்பு சிலவேளை உடனடியாகவோ சிலவேளை தாமதமாகவோ இடம்பெறலாம்.

குழந்தைப் பாக்கியமற்ற ஒரு தம்பதி தமக்கு குழந்தைப் பாக்கியத்தை அருளுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் அவ்வாறே நல்ல குழந்தைப் பாக்கியத்தை வழங்குவதன் மூலம் அவர்களது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றான். சிலவேளை உடனடியாகவும் இப்பிரார்த்தனை நிறைவேறலாம். அல்லது தாமதமாகலாம். எப்படியும் அந்தப் பிரார்த்தனை நாடப்பட்டவாறே நிறைவேறும். இவ்வாறு நேரடி விளைவுகளை ஏற்படுத்துகின்ற பிரார்த்தனைகள் இந்த முதல் வடிவத்தைச் சார்ந்தவையாகும்.

2. எமக்கு மிகச் சிறந்ததை வழங்குவதன் மூலம் பதிலளிப்பு

இரண்டாவது வடிவம் , மனிதன் அல்லாஹ்விடம் ஒன்றைக் கேட்டு பிரார்த்திக்க, அல்லாஹ் வேறு ஒன்றை வழங்குவான். அல்லாஹ் வழங்கியது அவன் கேட்டதை விட பல வழிகளில் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் மனிதனுக்கு எது சிறந்ததென்று மிகவும் அறிந்தவன் இறைவன் மாத்திரமே.

அடியான் அவன் கேட்டதைப் பெற்றுக் கொள்ளாமல் அதற்குப் பகரமாக வேறு நன்மைகளை அடைந்து கொள்வான். அவனுக்கு ஏற்பட இருந்த தீங்குகளிலிருந்து பாதுகாப்பு பெறுவான். அல்லது அவனது பாவங்கள் மன்னிக்கப்படுவதினூடாக அல்லாஹ் அந்தப் பிரார்த்தனைக்கு பதிலளிக்கலாம்.  எனவே தனக்கு அல்லாஹ் மிகச்சிறந்ததை வழங்கியுள்ளான் என்பதை அடியான் இறுதியில் கண்டுகொள்வான்.

03. மறுமை நாளில் அதற்கான பதிலளிப்பு

மனிதன் கேட்கும் பிரார்த்தனைகளுக்கு உலகில் எந்தவிதமான நேரடி அல்லது மறைமுக விளைவுகளையும் காணமுடியாத பிரார்த்தனைகள் இந்த வடிவத்தைச் சார்ந்தவை.

இந்த வடிவத்தில் ஒரு அடியானின் பிரார்த்தனைகள் அமைகின்றபோது அவன் நிராசையடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனால், உண்மையில் இந்த வகையான பிரார்த்தனைகள்தான் மிகவும் உன்னதமானவை. நிரந்தர நன்மையளிப்பவை. நபிமொழியொன்று குறிப்பிடுவது போல,  ஒரு அடியானை நாளை மறுமையில் அல்லாஹ் அழைப்பான். உலகில் நிறைவேறாத அவனது பிரார்த்தனைகளுக்கான வெகுமதிகளை சுவனத்தில் அல்லாஹ் வழங்குவான்.

அந்த மாபெரும் வெகுமதிகளைக் காணும்போது அந்த அடியான், தனது எந்தவொரு பிரார்த்தனையும் உலகில் நிறைவேறாமல் இருந்திருக்க வேண்டுமே என்று அங்கலாய்ப்பான்.

இவ்வாறு அல்லாஹ் தனது அடியார்களின் பிரார்த்தனைகளை அங்கீகரிக்கின்றான். அவற்றுக்கு பல வடிவங்களில் பதிலளிக்கின்றான். பிரார்த்தனை என்ற செயற்பாடு ஒரு திக்ர் என்ற வகையில் அதனூடாக மனிதன் இறைவனை நினைவுபடுத்துகின்றான் என்ற வகையிலும் அதற்கு மிகப்பெரும் நன்மை அல்லாஹ்விடத்தில் உள்ளது. எனவே ஒருபோதும் எமது பிரார்த்தனைகளை அல்லாஹ்  வீணடிக்க மாட்டான். எமது பிரார்த்தனைகளுக்கான கூலிகளை அவன் முழுமையாக வழங்கியே தீருவான்.

எமது பிரார்த்தனைகளுக்கான பதிலளிப்பு எந்த வடிவத்தில் அமைந்தாலும் அவை அனைத்தும் எமக்கு நன்மையாகவே அமையும். எனவே நாம் பிரார்த்தனை செய்வதில் நிராசையடைய எந்தத் தேவையுமில்லை.

மாறாக, நாம் அல்லாஹ் மீது ஆழமான நம்பிக்கை வைப்போம். எமது எல்லாத் தேவைகளையும் அவனிடம் முன் வைத்துப் பிரார்த்திப்போம். எது மிகச் சிறந்ததோ அந்த வடிவத்தில் அல்லாஹ் எம் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பதிலளிப்பான்.

அஷ்ஷெய்க் ஏ.கே.பிஷ்ருல் ரிபாத் (நளீமி)


Add new comment

Or log in with...