'தீன்' என்பதன் பொருள் 'மதம்' அல்ல | தினகரன்


'தீன்' என்பதன் பொருள் 'மதம்' அல்ல

அல்குர்ஆன் பாவிக்கும் 'தீன்' என்ற சொல்லை  'மதம்' என அர்த்தப்படுத்தினால் அல்குர்ஆன் 'தீன்' என்பதால் சொல்லவரும் கருத்தைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியாது போகலாம். 'தீன்' என்ற சொல்லின் மொழி சார்ந்த பின்னணியைக் கவனமாக நோக்கும்போது  அது பிரயோக ரீதியாகவும் 'மதம்'  என்ற அர்தத்துக்கு உட்படுவதில்லை.

'லா இக்ரஃ பித்தீன்' என்ற வசனம்  இறக்கப்பட்ட சூழமைவை வைத்து 'தீன்' என்ற சொல்லை புரிந்துகொள்ள முனையும்போது அச்சொல் "மதம்' என்ற பொருளை கொடுப்பதில்லை.

தூதுக்கு முன் அன்சாரிப் பெண்கள் யூதர்களிடம் தம் பிள்ளைகளை வளர்க்க கொடுக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் யூதப் பாராம்பரியத்திலே வளர்வார்கள். தூதுக்குப் பின் அவர்களை மீட்டு எடுப்பதற்கு அன்சாரிகள் நாடிய போதே 'லா இக்ரஃ பித்தீன்' என்ற வசனம் இறங்கியது.

நபியவர்கள் கொண்டுவந்த புர்கான், மூஸா அலை அவர்கள் கொண்டுவந்த தவ்ராத் இரண்டும் ஒரே - அகீதா- கலிமாவைக் கொண்ட 'கிதாப்' ஆகும்.  முஹம்மத் ஸல் அவர்களின் காலத்தில் அவர்களை தூதராக ஏற்றவர்களை அடையாளப்படுத்தவே 'முஃமீன்கள்' என்று அல்குர்ஆன் பேசுவதே ஒழிய அவர்களை தவ்ராத், இன்ஜீலை விட்டும் வித்தியாசமான அகீதா - கொண்டவர்களாக அடையாளப்படுத்த அல்ல.

69. நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும், கிறித்தவர்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன்  5:69

முஃமீன்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்போர் அடையாளத்தில் வேறுபட்டு இருந்தாலும்  'அல்லாஹ்வை, இறுதிநாளை  ஈமான் கொள்வோரை  ஒரே இஸ்தானத்தில் - 'அகீதா', கிதாப்'  வைத்தே அல்லாஹ் நோக்குகிறான். என்பதை இவ்வசனம் காட்டுகிறது.

தவ்ராத்தில் வளர்ந்த முஃமீன்களின் (அன்சாரிகளின்) பிள்ளைகளை முஃமீன்களாக நிர்பந்திக்க வேண்டாம்  என்பதே 'லா இக்ரஃ பித்தீன் சொல்ல வரும் செய்தி. அதாவது ஒரே அகீதாவில் வேறு வேறு ஒழுங்கு முறையில் - தீன்- (ஸிஸ்டம்)இல் வாழ அனுமதியுங்கள் என்பதே செய்தியாகும். எனவே 'தீன்' என்பது 'ஒழுங்கு முறை'  என்றே அர்த்தம் கொள்ளப்பட்டே  அல்குர்ஆன் வாசிக்கப்பட வேண்டும்.

"தீன்" என்ற சொல்லின் மொழிசார்ந்த பின்னணியும் 'ஒழுங்கு முறை' என்ற இக்கருத்தையே காட்டுகிறது. அதாவது அரபு மொழியின் 'தான' என்ற சொல்லடியிலிருந்தே 'தீன்' , ' மதீனா' என்ற சொற்கள் பிறக்கின்றன. 'மதீனா' என்பது ஒழுங்கு முறையாக  இயங்கும் நிர்வாக நகரத்தையே குறிக்கிறது. இக்கருத்தை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம்

'ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த சமூகத்திற்கு அவர்களின் தீனைப் புதிப்பிப்பவரை 'முஜத்திதை' நிச்சயமாக அல்லாஹ் அனுப்புவான்.'

ஆதாரம் : அபூதாவூத்

"ஒவ்வொரு நூற்றாண்டும் இந்த சமூகத்தின் வாழ்வு 'ஒழுங்கு முறையை' -தீனை- புதிப்பிக்க" என்று குறித்த ஹதீஸை புரிவது குறித்த ஹதீஸ் சொல்ல வரும் செய்தியை மிகத் தெளிவாக புரியலாம்.

 அதாவது ஒவ்வொரு நூற்றாண்டும் மனித வாழ்வின் சூழமைவுகள் மாறுவதால் மனித சமூகத்தின் வாழ்வு ஒழுங்கு முறைமை மாறும். அதை முஹம்மத் நபி ஸல்  அவர்களின் தூதின் பிரகாரம்  ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும் என்று புரிவதே மிகச்சரியாகும். 

மதம் என்பது ஒன்றை விமர்சனம் இன்றி கண்மூடித்தனமாக பின்பற்றும் செயற்பாட்டைக் குறிக்கும். எனவே தீன் என்பதற்கு மதம் என்ற அர்த்தம் பிழையானது  மாறாக ஒழுங்கு முறை (ஸிஸ்டம்) என்பதே சரியானதாக இருக்கும்.

அபூ இல்பா, பேருவளை


Add new comment

Or log in with...