குணமடைந்த கடற்படையினர் 357ஆக உயர்வு

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து  நேற்று (27) வெளியேறியுள்ளனர்.

இதன்படி கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 357ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பதின்மூன்று பேரில் 08 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 04 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் முல்லேரியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளுக்கு அமைய குறித்த வைரஸ் தொற்று  அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால்,  அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்றையதினம் வெளியேறியுள்ளனர்.

இக்கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும்,  சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, அவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,503 பேரில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 729 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 693 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர்.

இது தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கையில் சுமார் அரைவாசியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...