இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை வைத்து ஜனாதிபதி மீது சேறு பூச முயற்சித்த சக்திகள்!

வெசாக் தினம் மற்றும் வெசாக் வாரம் முடிவடைந்து இஸ்லாமிய மக்களின்  ரமழான் பண்டிகையும் கடந்து விட்டது.  பௌத்த மக்களின் பொசன் பண்டிகையை எளிய முறையில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று இலங்கையில் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதை உணர முடிகிறது. நோய் குணங்குறி காண்பிக்காத நிலையில் பலர் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டமையே பிரதான காரணமாகும்.  இதுவே  இலங்கையின்  வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

ஏனைய உலக  நாடுகளில்  இந்த  நிலை இல்லை. குணங்குறி தென்பட்ட பின்னரே வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இது வைரஸ் தொற்று பரவலையும் நோய்த் தாக்கத்தையும் தீவிரப்படுத்தியது. இலங்கை இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னே சென்றதால், கொரோனாவுக்குப் பின்னர் என்ற காலகட்டத்தை எதிர்கொள்ளும் உலக  நாடுகளில் முதன்மை நாடாக இலங்கை காணப்படுகிறது.  இலங்கையில் மே மாதம் 20ம் திகதி அளவில் 1027 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர். 586  பேர் பூரண குணமடைந்துள்ளனர். 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன் பின்பு 10ஆவது மரணம் கடந்த 25ஆம் திகதி பதிவாகியது. குவைத்திலிருந்து வந்த ஒரு பெண்மணியே உயிரிழந்தார்.

கொரோனா தொற்றிலிருந்து  தீவு நாடுகளே முதலில் விடுபடும் என சில ஆய்வறிக்கைகள்  முன்னர் குறிப்பிட்டிருந்தன. அதன்படியே இப்போது அனைத்தும் இடம்பெறுகின்றன.

கொரோனாவுக்குப் பின்னர் உள்ள காலப் பகுதியும் மிகவும் சவால் மிக்கது. நாட்டின் பொருளாதாரத்தைக்  கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.  வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். வருமான வழிகளை  அதிகரிக்க வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கையையும் மேம்படுத்த வேண்டும்.  கைத்தொழில்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். 

இவ்வாறு பல விடயங்கள் உள்ளன. பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். ஏற்கனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. விவசாயத்துறை, மீன்பிடித்துறை மற்றும் ஏற்றுமதிப் பயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான சக்தியையும் பலத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முப்படையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய துறையினரும் கொண்டுள்ளனர் என்பது  உறுதி.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இரட்டைக் குடியுரிமை விடயத்தை வைத்து சேறு பூசிய விடயங்களையும்  இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான பொய்யான பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமானது இரட்டைக் குடியுரிமை விடயமாகும்.  இந்த இரட்டைக் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி தாம் முன்கூட்டியே விண்ணப்பித்ததாகவும், அதற்கான ஆதாரத்தையும்  கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தடவைகள் ஊடகம் முன்தோன்றி கூறினாலும், எதிர்தரப்பு அரசியல்வாதிகளும் சில அரச மற்றும் தனியார் ஊடகவியலாளர்களும் பொய்யான கதைகளை புனைந்து சேறுபூசல் செயல்களை பாரிய அளவில்  மேற்கொண்டனர்.

இது சில தாக்கங்களையும் ஏற்படுத்தியது.  ஆனால் தற்போது உண்மை வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.  இலங்கையில் உள்ள அமெரிக்கத்  தூதரகமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமையைக் கைவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி நோக்குமிடத்து எதிர்தரப்பு அரசியல்வாதிகள் பலரும் சில ஊடகவியலாளர்களும் இவ்வாறு சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்தமை சட்டத்துக்கு விரோதமானதாகும்.

'இலங்கையில் அமுலில் உள்ள பீனல் கோட் 479ம் பிரிவு 19ம் அத்தியாயத்தில் ஒருவரது நற்பெயருக்கு அவதூறு எற்படுத்தும் குற்றம் பற்றி நன்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரது சுயகௌரவம், நற்பெயர், கீர்த்தி நாமம், ஒழுக்க விழுமியம் மற்றும் நல்சுயசரிதைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பாக பொய்ப் பிரசாரங்களையும் புனையப்பட்ட கதைகளையும் வாய்ச் சொல்லாலோ, எழுத்தாலோ அல்லது வேறு வகையிலோ பங்கம் ஏற்படுத்தியமை நிரூபிக்கப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

குறைந்தபட்சம் 6 தொடக்கம் 12 மாத கால சிறைத்தண்டனையும் குற்றத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து குற்றவாளி, தண்டப்பணம், நஷ்டஈடும் கொடுக்க வேண்டி ஏற்படும்.

இதேவேளை, பொதுத் தேர்தல் இடம்பெறும் திகதியை ஆட்சேபித்து, உச்ச நீதிமன்றத்தில் 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  அவை மே மாதம் 19ம் திகதி மற்றும்  20ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் 501ம் இலக்க அறையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அடங்கலாக ஐவர் கொண்ட நீதிபதி குழுவினால் இது விசாரிக்கப்பட்டது.

பாராளுமன்றம் இல்லாமல் குறித்த கால எல்லை தாண்டிய பகுதியில் நிதி கையாள்கை சட்ட வலுவற்றது என்பது இந்த மனுக்களில் பெரும்பாலானவற்றின் அடிப்படை வாதமாகும்.

ராவய பத்திரிகை பிரதம ஆசிரியர் மற்றும் சமகி ஜன பலவேகய,மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம்  உட்பட சில அமைப்புகளும் தனிநபர்களுமே இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். 

அதேவேளை மனுக்களை மறுபரிசீலனை  செய்யக் கோரி இடைமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இக்கட்டான காலகட்டத்தில் ஜனாதிபதிக்குரிய சிறப்பு சலுகை மற்றும் நிறைவேற்று அதிகார சரத்துக்கள் பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுக்காகவே  சட்டமே தவிர  சட்டத்திற்காக மக்கள் அல்ல. எது எவ்வாறாக இருப்பினும் இந்த விடயம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுபற்றி நாம் விமர்சனங்களை முன்வைக்க வேண்டியதில்லை. நாட்டின் சட்ட நடைமுறைக்கு மதிப்பளித்து அதன் தீர்ப்பு வந்த பின்னர் எமது கருத்துக்களை முன்வைப்போம்.

எது எவ்வாறாக இருந்தாலும் எமது நாட்டை நாமாக மீள எழச் செய்யும் பயணம் வெற்றிகரமாக முன்னோக்கி பயணிக்கிறது என்பது மட்டும் உண்மை.

ஜெயரஞ்சன் யோகராஜ்
[email protected]


Add new comment

Or log in with...