வேறு கட்சிகளில் இணைந்த ஐ.தே.க. உறுப்பினர் உறுப்புரிமை தொடர்பில் நடவடிக்கை

வேறு கட்சிகளில் இணைந்த ஐ.தே.க. உறுப்பினர் உறுப்புரிமை தொடர்பில் நடவடிக்கை-UNP Decided to Take Action Against Those Took Other Party Membership

எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்காக, வேறு கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றுள்ள மற்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் உறுப்புரிமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் விடுத்துள்ள, ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.தே.கவைச் சேர்ந்த ஒரு சிலர், வேறு கட்சிகளின் ஊடாக உறுப்புரிமையை பெற்று எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுவிலும் கையொப்பம் இட்டுள்ள அல்லது அவ்வாறு மேற்கொள்ள முடிவு செய்யும் எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் கட்சியின் யாப்பின் பிரிவுகளின்கீழ், செயற்குழுவின் முன் அனுமதியை எழுத்து மூலமாக பெற வேண்டும்.

சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டுள்ள குறித்த ஒரு சில உறுப்பினர்கள், யாப்பின் விதிகளுக்கு அமைய செயற்படாமலும், செயற்குழுவின் முன் அனுமதியையும் பெறமலும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு கட்சி யாப்பினை மீறி செயற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் நீண்டகால நிலைமை பாதுகாக்கும் நோக்கில், கட்சி யாப்பின் பிரிவுகளுக்கு அமைய செயற்பட, கட்சியின் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.

தற்போது வேறு அரசியல் கட்சிகளின் உறுப்புரிமையை பெற்று வேட்புமனுவில் கையொப்பம் இட்டுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள், தாம் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் பின்வாங்கியுள்ளமையை எமக்கு அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் கட்சியின் யாப்புக்கு அமைய வேறு கட்சிகளின் ஊடாக பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த உறுப்பினர்களால் அது தொடர்பில் எழுத்து மூலம் மேற்கொள்ளப்படுகின்ற விளக்கம் அல்லது மேன்முறையீடுகள் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேறு கட்சிகளில் இணைந்த ஐ.தே.க. உறுப்பினர் உறுப்புரிமை தொடர்பில் நடவடிக்கை-UNP Decided to Take Action Against Those Took Other Party Membership


Add new comment

Or log in with...