பொது சுகாதாரம் இன்றி பொருளாதாரம் இல்லை | தினகரன்

பொது சுகாதாரம் இன்றி பொருளாதாரம் இல்லை

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கொள்கை விருப்பத்தின் அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட நாடுகளில் ஒன்றான ஸ்வீடனிலிருந்து கிடைத்திருக்கும் பொருளாதாரத் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார மந்த நிலையை நோக்கி சுவீடன் சென்று கொண்டிருக்கிறது. அந்நாட்டின் சேவைத் துறையைச் சேர்ந்த 40 சதவீத நிறுவனங்கள் திவால் நிலையை அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

சுவீடனின் சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? கடந்த சில மாதங்களாக நாம் தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் விஷயம்தான் இது. வைரஸ் பெருந்தொற்றுக்கு நடுவே பொருளாதார நடவடிக்கைகளைத் திறப்பது என்பது ஒரு நாட்டின் பிரதமரோ, அவரது அரசோ அல்லது வணிகச் சமூகமோ எதிர்பார்க்கும் அளவுக்கு எந்தப் பலனையும் அளிக்கப்போவதில்லை. சான்றுகள்தான் கொள்கைக்கான ஆதாரமாக இருக்க வேண்டும். விருப்பத்தின் பேரிலான சிந்தனை அல்ல. வலுவான பொது சுகாதார நடவடிக்கைகள் அடங்கிய எதிர்வினைதான், வலுவான பொருளாதார மீட்புக்கு வழிவகுக்கும் என்பதைத்தான் இந்த ஆதாரங்கள் சொல்கின்றன.

தளர்வுகளுக்குத் தயாரா?

100 வருடங்களுக்கு முன்னர், ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ தொற்றுநோய் சமயத்தில், அமெரிக்காவின் நிலை எப்படி இருந்ததோ, அதேபோன்ற நிலையில் இன்றைக்கு சுவீடன் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அமெரிக்காவில் பொதுமுடக்க நடவடிக்கைகளைத் தளர்வுகளுடன் மேற்கொண்ட நகரங்களைவிட, அந்நடவடிக்கைகளைக் கடுமையாக அமுல்படுத்திய நகரங்களில் விரைவில் பொருளாதார நடவடிக்கைகள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பொதுமுடக்கத்துக்கும், பொதுமுடக்கம் இல்லாமைக்கும் (பொது சுகாதார அம்சம் முற்றிலும் புறந்தள்ளப்பட்ட சூழல்) இடையிலான வித்தியாசத்தின் அடிப்படையில் பொருளாதார விளைவுகளைக் கணக்கிட்டால், உலக அளவில் பொருளாதாரம் மூன்று விதங்களில் பாதிப்பைச் சந்தித்திருப்பதைக் காண முடியும்.

1. பெருந்தொற்றின் காரணமாகப் பொருளாதார ரீதியாக ஏற்பட்டிருக்கும் ‘வெளிப்படையான’ பாதிப்புகள் (விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள், உலகளாவிய போக்குவரத்து மற்றும் தளவாட இணைப்புகள் முடங்கிக் கிடப்பது, உணவுப் பொருட்களின் விநியோகம், தொழிலாளர்களின் போக்குவரத்து, முதலீடு, மூலதனம் ஆகியவற்றின் சுழற்சியில் ஏற்பட்டிருக்கும் தடங்கல் என்பன போன்றவை)

2. பெருந்தொற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட ‘உள்ளார்ந்த’ பாதிப்புகள் (தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சந்தைகள் மூடல் என்பன போன்றவை)

3. பொது சுகாதார விளைவுகள் (உற்பத்தி இழப்பு, ஊழியர்கள் பணிக்கு வராதது, வாடிக்கையாளர்களின் அச்சம், கொரோனா தொடர்பாக உருவாகியிருக்கும் நிதி இழப்புகள் உள்ளிட்ட இழப்புகள்)

இந்த மூன்று பாதிப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஒன்றுக்கொன்று வலு சேர்ப்பவை என்றாலும் இவை மூன்றுமே தனித்தனியான இழைகள் என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். எனவே, பொது முடக்கத்தைத் தவிர்க்க ஒரு நாடு முடிவெடுத்துவிட்டால், பொது சுகாதார நெருக்கடியின் விளைவுகளிலிருந்தோ, உலகளாவிய பொருளாதார மந்த நிலையின் விளைவுகளிலிருந்தோ அந்நாட்டால் தப்பிக்க முடியாது.

தவறான முடிவுகள்

சுவீடனின் இன்றைய நிலை இதுதான். பொருளாதார நடவடிக்கைகளை மூடாமல் தவிர்க்கும் முடிவை சுவீடன் எடுத்ததற்கான முதன்மைக் காரணம் பொருளாதார அடிப்படையிலானது அல்ல. தொற்று நோயியல் தொடர்பானதுதான். பெருந்தொற்றுக்கு நடுவே சமூகத்தைத் திறந்து வைத்திருந்ததன் மூலம், மந்தை நோயெதிர்ப்பு சக்தியை மக்கள் மத்தியில் உருவாக்க சுவீடன் விரும்பியது. தடுப்பூசி இல்லாத சூழலில், நீண்ட காலத்துக்குக் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அதுதான் ஒரே வழி என்று அந்நாடு கருதியது.

அதாவது, வைரஸ் பரவல் முடிவுக்கு வந்து விட்டது அல்லது அதனுடனேயே இருந்தாக வேண்டும் என்று கருதிக் கொண்டதைப் போல சுவீடன் அரசு செயல்பட்டிருக்கிறது. இந்த இரண்டுமே மிக மோசமான தவறுகள்தான். கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வர நீண்ட காலம் பிடிக்கும். உண்மையில், பொதுமுடக்கத்தைப் பகுதியளவில் முன்கூட்டியே தளர்த்தும் நாம், ‘கோவிட்-19’ நோய் மீண்டும் தீவிரமடையும் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடையும் சூழல், நேரடியாகப் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டுவிடும்.

அரசுகள் அளிக்கும் ஆதரவு

பொருளாதார ரீதியாக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மேலும் சில விஷயங்களைப் பேச வேண்டும். பொது சுகாதார அடிப்படையில் பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகள் தாமதமானவை, தற்காலிகமானவை, சீரற்றவை என்று எழுந்திருக்கும் விமர்சனங்கள் சரியானவைதான். மறுபுறம், அரசு எடுத்திருக்கும் பொருளாதார நடவடிக்கைகள், பணக்காரர்களின் நலன் சார்ந்தவை என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். ஏற்றுமதித் துறைக்கும், கட்டுமானத் துறைக்கும் ஆதரவளிக்கும் வகையிலான பொருளாதாரத் தொகுப்பை அரசு அறிவித்திருப்பதை அதற்கு ஆதாரமாக முன்வைக்கிறார்கள்.

ஆனால், இந்த விமர்சனங்கள் திசைதிருப்பக்கூடியவை மட்டுமல்ல, பல்வேறு விதங்களில் நியாயமற்றவையும்கூட. முதலாவதாக, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்தே விமானப் போக்குவரத்து, சுற்றுலா, தங்கும் விடுதிகள் உள்ளிட்ட விருந்தோம்பல் துறைகள் போன்றவற்றைப் போலவே ஏற்றுமதித் துறையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதியில் 54 சதவீதம் குறைந்திருப்பதன் மூலம் இது தெரியவருகிறது.

ஏற்றுமதித் துறை என்பது அந்நியச் செலாவணியை உருவாக்குவதால் மட்டுமல்ல, நேரடியாகவும் மறைமுகமாகவும் மில்லியன் கணக்கானோருக்கு வேலையளிக்கும் துறை என்பதாலும், அது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானது. பொருளாதாரத்தின் பிற துறைகளுடன் ஏற்றுமதித் துறைக்கு இருக்கும் தொடர்புகள் உள்ளிட்ட காரணிகளும் புறந்தள்ள முடியாதவை. கட்டுமானத் துறையும் அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

நிதித் தொகுப்பின் முக்கியத்துவம்

அரசின் ஆதரவு இந்த இரண்டு துறைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பொது முடக்கத்தால் பாதிப்பைச் சந்தித்திருக்கும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சில அறிவிப்புகளை மத்திய வங்கி வெளியிட்டிருக்கிறது. ‘ரோஜ்கார்’ திட்டத்தின்படி சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி வழங்கப்படுகிறது. 10 லட்சம் தொழிலாளர்களின் ஊதியத்துக்கு இந்தத் தொகை செலவழிக்கப்படும்.

பல்வேறு நாடுகளில் சிறு தொழில்கள் மற்றும் பெரும் தொழில்களைப் பாதுகாக்கும் வகையில், அவசரகால உதவிகளும், ஊக்கமளிக்கும் வகையிலான நிதித் தொகுப்புகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஜெர்மனியும் இத்தாலியும் தங்கள் ஜிடிபியில் 35 சதவீதத்தைக் கொரோனா நிதித் தொகுப்பாக ஒதுக்கியிருக்கின்றன. ஜப்பான் தனது ஜிடிபியில் 21 சதவீதத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்தியா தனது ஜிடிபியில் ஏறத்தாழ 10 சதவீதத்தை ஒதுக்கியிருக்கிறது.

அவற்றுடன் ஒப்பிட பாகிஸ்தான் அறிவித்திருக்கும் நிதித் தொகுப்பு குறைவுதான்.

எல்லா நாடுகளிலும் அரசு வழங்கும் நிதித் தொகுப்புகளில் அதிகப் பலனைப் பெரு நிறுவனங்கள்தான் பெறுகின்றன என்றாலும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொருளாதார மதிப்புச் சங்கிலியில் முக்கியக் கண்ணியாக இருப்பதுடன் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கின்றன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

துயரமான காலத்தில் அரசு வழங்கும் ஆதரவு என்பது மிக முக்கியமானது!


Add new comment

Or log in with...