டெங்கு அச்சுறுத்தல் அபாயம்; கவனமாக செயற்பட வேண்டும் | தினகரன்

டெங்கு அச்சுறுத்தல் அபாயம்; கவனமாக செயற்பட வேண்டும்

சுகாதார அமைச்சு

மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில்ஜா சிங்க நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அறிகுறி போன்றே டெங்குக்கான அறிகுறியும் காய்ச்சலாக இருப்பதால் அந்த இரண்டு நோய்களையும் ஒரே சமயத்தில் பிரித்தறிவது கஷ்டமானது என்றும் அந்த நிலையை தவிர்த்துக் கொள்ளும் வகையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் செலுத்துமாறும் அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

வீடுகள், நிறுவனங்கள்,வீதிகள் உள்ளிட்ட இடங்களில் 'ஈட்ஸ்' எனப்படும் நுளம்பு சுத்தமான நீரில் உருவாவதால் அவ்வாறான இடங்கள் உருவாவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் மனிதருக்கும் மனிதருக்குமிடையில் ஏற்படும் அதேவேளை டெங்கு நோய் மனிதனுக்கும் சுற்றாடலுக்கு மிடையிலான தொடர்புகளாலேயே உருவாகின்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலோடு டெங்கு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் இக்காலங்களில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு உற்பத்தி அதிகரித்து வருவதாகவும் அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருவதால் டெங்கு நோய் தொடர்பில் கவனம் செலுத்துவது குறைந்துள்ளதாகவும் மக்கள்அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...