சுகாதார நடைமுறைகளை பேண பாடசாலைகளுக்கு ரூ. 680 மில் ஒதுக்கீடு

பெற்றோரிடம் பணம் அறவிட எண்ணமில்லை கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பதாக முறையான சுகாதார பாதுகாப்பு செயற்திட்டங்களை சகல பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்காக ஒரு பாடசாலைக்கு 30.000 ரூபா வீதம் 680 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதேவேளை; பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் தேசிய செயற்திட்டம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசியல் கட்சி, தொழிற்சங்கங்கள் எதுவாயினும் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் போன்று செயற்படவேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் கல்வியமைச்சு அனைத்து மாகாண அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியமான தரப்புகளுடன் இணைந்து தேசிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

எனினும் அந்த வேலைத்திட்டம் தொடர்பில் சரியான தெளிவில்லாத சில தரப்புகள் சமூகத்தை திசை திருப்பும் வகையில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதைய சவால்மிக்க இத்தருணத்தில் அரசியல்கட்சிகளானாலும் சரி தொழிற்சங் கங்களானாலும் சரி மாணவர்கள் தொடர்பில் மிக நேர்மையாக செயற்படவேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா  வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் அது தொடர்பான செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் நிகழ்வின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முழு நாடும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள இத்தகைய சந்தர்ப்பத்தில் அரசாங்க பாடசாலைகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது.

இந்நிலையில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நோக்கில் தேவையான சுகாதார பாதுகாப்பு வசதிகளை அமைச்சு மேற்கொள்ளும் நிலையில் பெற்றோர்களுக்கு தேவையற்ற சுமையை சுமத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுப்பதாக சில தொழிற்சங்க பிரதிநிதிகள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறெனினும் பாடசாலைகளில் திறப்பதற்கு முன்பதாக சுகாதாரத் துறையினரின் முழுமையான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு அவர்கள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் திறக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் உபகரணங்கள் கைகளை கழுவிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் சிகிச்சைகளென அனைத்து வசதிகளும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதற்காக பெற்றோர்களிடமிருந்து எந்த ஒரு நிதியும் பெற்றுக்கொள்ளவில்லை.

அதற்கென 200ற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை ஒன்றுக்கு 30.000 ரூபா வீதம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளதுடன் இதற்கென 680 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...