உலகெங்கும் இம்முறை அமைதியான பிரார்த்தனையுடன் நோன்புப் பெருநாள் | தினகரன்

உலகெங்கும் இம்முறை அமைதியான பிரார்த்தனையுடன் நோன்புப் பெருநாள்

இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் அண்மைக் கால வரலாற்றில் முதல் தடவையாக புதிய அனுபவங்களுடன் தத்தமது வீடுகளில் இருந்தபடி 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாளை அமைதியாக அனுஷ்டித்துள்ளனர்.

முழு உலகிற்கும் பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் விளங்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே முஸ்லிம்கள் பெருநாளை இவ்வாறு வீடுகளில் இருந்தபடி கொண்டாடியுள்ளனர்.

கொரோனா வைரஸ் என்னும் கொவிட்-19 உலகிற்கு புதிய ஒன்று என்பதால் குறுகிய காலப் பகுதிக்குள், அதாவது ஐந்து மாத காலப் பகுதிக்குள் சுமார் 52 இலட்சம் பேரைப் பாதித்துள்ளதோடு, 03 இலட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. அதேநேரம் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 22 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பதையும் மறந்து விட முடியாது.

அந்த வகையில் இலங்கையில் இவ்வைரஸ் தொற்றுக்கு இற்றை வரையும் (24.05.2020) 1094 பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் 674 பேர் குணமடைந்திருக்கின்றனர். இத்தகவல்களை சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இவ்வைரஸின் பரவுதலும் தாக்கமும் உலகெங்கிலும் பெரும் நெருக்கடியையும், குறிப்பாக மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இதன் காரணத்தில் இவ்வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளைப் பரந்தடிப்படையில் ஒவ்வொரு நாடும் முன்னெடுத்திருக்கின்றது. இத்திட்டத்தின் கீழ் ஊரடங்குச் சட்டம், 'லொக்டவுன்' என்பன முன்னெடுக்கப்படுவதோடு சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படைச் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பேணுதல் போன்றனவும் பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றன.

இவ்வாறான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலங்கையிலும் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நடவடிக்கைகளுக்கு இந்நாட்டு முஸ்லிம்களும் முழுமையான ஒத்துழைப்பை நல்கியபடி ரமழான் நோன்பு காலத்தைக் கழித்ததோடு நோன்பு பெருநாளையும் வீடுகளில் இருந்தபடியே பெருநாள் தொழுகையை நிறைவேற்றி கொண்டாடியுள்ளனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம் புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் நோன்பு காலத்தையும் அது தொடர்பான இறைவணக்கங்களையும் மாத்திரமல்லாமல் நோன்பு பெருநாளையும் வீடுகளில் இருந்தபடியே அனுஷ்டித்து கொரோனா பரவுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அறிவுரை நல்கி கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கேற்ப ரமழான் மாதம் முழுவதும் மாத்திரமல்லாமல் நோன்புப் பெருநாளின் முக்கிய கடமையான பெருநாள் தொழுகையையும் வீடுகளிலேயே இருந்தபடி முஸ்லிம்கள் நிறைவேற்றியுள்ளனர்.

ஆனால் பெருநாள் தொழுகையானது மைதானத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இருப்பினும் சூழ்நிலைக்கும் அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கும் ஏற்ப இக்கடமை முஸ்லிம்களால் வீடுகளில் இருந்தபடி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களின் முதலாவது புனிதத் தலமான மக்காவிலுள்ள கஃப துல்லா, இரண்டாவது புனிதத் தலமான மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவி, மூன்றாவது புனிதத் தலமான பலஸ்தீனிலுள்ள பைத்துல் முக்கதிஸ் உள்ளிட்ட எல்லா பள்ளிவாசல்களும் இவ்வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இயல்பு நிலையை இழந்துள்ளன. மக்கள் கூட முடியாதபடி மூடப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாள் தொழுகையையும் வீடுகளிலேயே நிறைவேற்றி பெருநாளை அனுஷ்டித்திருக்கின்றனர்.

இஸ்லாமிய சந்திர வருட கணிப்பீட்டின்படி ரமழான் என்பது ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் முழுவதும் தினமும் காலை முதல் மாலை வரையும் நோன்பிருந்து இறைவணக்கங்களில் ஈடுபடுவது முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும். இக்கடமையின் நிறைவில் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவது வழமையாகும். நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில்தான் அதிகம் இறைவணக்கங்களில் ஈடுபடுவர். ஆனால் தற்போதைய சூழலில் கொரோனா ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலால் வீடுகளில் இருந்தபடி பள்ளிவாசல்களில் போன்று குடும்பத்தினருடன் இறைவணக்கங்களிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இவ்வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தவென அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்களும் முழுமையான ஆதரவு நல்குகின்றனர்.

இவ்வாறான சூழலில் நோன்புப் பெருநாளின் நிமித்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான ரமழான் நோன்பு உலகாயத ஆசைகளில் இருந்து விலகி ஒரு தூய முன்னுதாரணமான வாழ்வொழுங்கைப் பின்பற்றி வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது" என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு "முன்னொரு போதும் இல்லாத வகையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு முழு உலகமும் முகம் கொடுத்துள்ள இது போன்றதொரு காலகட்டத்தில் அடுத்த மனிதர்கள் பற்றிய சமூக பிரக்ஞை மற்றும் உளக்கட்டுப்பாட்டின் மூலமே நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதே ரமழான் உலகிற்கு வழங்கும் செய்தி" எனக் குறிப்பிடவும் தவறவில்லை.

உண்மையில் ரமழான் நோன்பு மற்றும் இறைவணக்கங்களின் ஊடாக உடல், உள ரீதியாகப் பெற்றுக் கொண்ட பயிற்சியையும் பக்குவத்தையும் வாழ்நாள் முழுவதும் எடுத்து நடப்பது குறித்து ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அது சிறந்ததும், ஆரோக்கியமானதுமான குடும்ப மற்றும் சமூக சூழலை உருவாக்கிக் கொள்ள பக்கத் துணையாக இருக்கும்.


Add new comment

Or log in with...