தன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு

‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப் பொருட்களின் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக அரசாங்கம் விரிவான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது’ என்று கூறுகின்றார் இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர.

கேள்வி: கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் சுயஉற்பத்தி நடவடிக்கையின் தேவை ஏற்பட்டுள்ளதல்லவா?

பதில்: உண்மையில் அது அவசியமானதாகும். பயிரிடக் கூடிய அனைத்து காணிகளிலும் இந்நாட்டில் வளர்க்கக் கூடிய அனைத்து பயிர்களையும் வளர்த்து தன்னிறைவான பொருளாதார முறையொன்றுக்கு மக்களை பழக்கப்படுத்த வேண்டும். அதற்காக அரசாங்கம் மக்களுக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் தற்போது தீட்டப்படுகின்றன. எமது நாட்டு சீமெந்து, துல்கிரிய உடுதுணி, லங்கா உலோக மண்வெட்டி என்பன நாட்டில்  உற்பத்தி செய்யப்பட்டன. இன்றும் எமது நாட்டில் அநேகமானவற்றை தயாரிக்கலாம் என ஜனாதிபதி அடிக்கடி கூறி வருகின்றார். கொரோனா தொற்று காரணமாக கட்டாயமாக எமது நாட்டில் உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. புதிய உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடியவர்களை ஊக்குவித்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

கேள்வி: மக்களுக்கு பாதுகாப்பை வழங்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் எவை?

பதில்: சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுரைகளை சரியாகப் பின்பற்றி நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேவையான இடைவெளிகளைப் பேணி காரியாலய நடவடிகைகளை மேற்கொள்ளவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமன்றி வேறு காரணங்களுக்காக மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும் நாம் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். கொரோனா தொற்றை ஒழிக்க நாம் குறிப்பிட்ட அனைத்துத் துறையினருக்கும் ஆதரவு வழங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எம் அனைவருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மக்கள் மாத்திரமன்றி நிறுவனங்களில் பணி புரியும் அனைவரும் சுகாதார அறிவுரைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் இந்தத் தொற்று நோயை எமது நாட்டிலிருந்து ஒழிக்க முடியும்.

கேள்வி: பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் என மக்கள் வினவுகின்றார்களே.

பதில்: சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னர் அனைத்து கல்வித் துறை அதிகாரிகளுடனும் கலந்துரையாடி பொருத்தமான நடைமுறைகளுக்கமைய பாடசாலைகளைத் திறக்க வேண்டும். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவதோடு பாதுகாப்பு குறித்தும் கவனம் எடுக்க வேண்டும்.

கேள்வி: நாடு பூராவும் வீட்டுத் தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் குறைநிறைகள் மற்றும் வீட்டுத் தோட்டத்தின் பெறுமதி குறித்து என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?

பதில்: தமது வீட்டுக்குத் தேவையான உணவை தோட்டத்திலேயே பயிரிடுவதன் மூலம் நஞ்சற்ற உணவை பாவனைக்கு எடுப்பதோடு பொருளாதார நன்மையும் கிடைக்கும். அதே போல் நாட்டுக்கு ஆற்றும் சேவையாகவும் அது அமையும். வீட்டுத் தோட்டங்களுக்குத் தேவையான பயிர் விதைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஊரடங்குச் சட்டம் அமுல் நடத்தப்படுவதால் சில பிரதேசங்களுக்கு பயிர் விதைகளைக் கொண்டு செல்ல முடியாதுள்ளது. எதிர்காலத்தில் அப்பிரதேசங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அரசாங்கம் தன்னால் முடிந்தவரை இத்திட்டத்தை வெற்றிகரமாக்க முயற்சி செய்கின்றது. வீட்டுத் தோட்டத்தின் மூலம் அதிகளவு அறுவடையைப் பெற்றால் அவற்றைப் பதப்படுத்துவதன் மூலம் சேமிக்க முடியும். அது மாத்திரமல்ல வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதி செய்யலாம். பதப்படுத்தலுக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்பவர்களும் இதனால் நன்மையடைவார்கள்.

கேள்வி: தற்போது விவசாயிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் எவை?

பதில்:  எமது நாடு விவசாய நாடு. விவசாயத்துக்கு முன்னுரிமையை இந்நாட்டு மக்கள் அளிப்பது குறித்து நாம் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். பாரிய அளவு காணிகளில் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்பாராத பிரச்சினைகளுக்கு தறபோது முகம் கொடுத்துள்ளார்கள். விதை நெல் மற்றும் உர வகைகளைக் கொண்டு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தீர்த்து வைத்து விவசாயிகளுக்கு ஒத்துழைப்பை வழங்க தற்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. வெய்யில் மழையென பாராது விவசாயிகள் இந்த தொற்றுநோய் காலத்தில் மக்களுக்கு உணவளிக்க எடுக்கும் முயற்சியை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

கேள்வி:  இலங்கை மக்கள் இச்சந்தர்ப்பத்தில் வெகுவிரைவாக குளங்களை புனர்நிர்மாணம் செய்ய வேண்டுமெனக் கூறுகின்றார்கள். அதற்காக நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் எவை?

பதில்: மக்கள் அதிகமாக விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுவதால் தேவையான நீரைப் பெற்றுக் கொள்வதற்காக குளங்களை புனர்நிர்மாணம் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக எமது அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குளங்கள் திருத்தப்படுவதால், அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவாக்கலாம். விவசாயிகள் நீரையும் உரத்தையுமே கேட்கின்றார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு அசேதன உரங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். குளங்களையும் வெகுவிரைவில் திருத்தியமைக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கேள்வி: அரசாங்கம் ஏதேனும் வரவு செலவு திட்டத்தை முன்வைத்த பின்னர் வருட நடுப்பகுதியில்தான் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி கிடைக்கும். அதனால் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுமென்ற கருத்து நிலவுகின்றதல்லவா?

பதில்:  ஒவ்வொரு வருடத்திற்கும் குறிப்பிட்ட நிதியை ஒதுக்குவது வருடத்தின் முதல் காலாண்டிலேயே மேற்கொள்ளப்படும். தற்போதைய அரசாங்கத்தால் சரியான திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முதல் காலாண்டில் திட்டங்களை  மேற்கொள்வதற்கான நிதியை அமைச்சுகளால் குறிப்பிட்ட திணைக்களங்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பெற்றுக் கொடுக்க விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சித்ராரத்ன களுஆராச்சி
தமிழில்: வீ.ஆர். வயலட்


Add new comment

Or log in with...