பாதசாரி கடவையில் விபத்து; இருவர் படுகாயம்

தலவாக்கலை நகரில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தலவாக்கலை நகரில் இருந்து லிந்துலை பிரதேசத்தை நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று,  பாதசாரிகள் கடவையில் கடந்து கொண்டிருந்த முதியவர் ஒருவருடன் மோதி அதன் காரணமாகவே குறித்த விபத்து சம்பவித்தது.

இதன்போது குறித்த முதியவரும் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும் படுகாயம் அடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த விபத்தானது ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சுமன மத்திய கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள பாதசாரிகள் கடவையில் நடந்தது.

மேலும் பாதசாரி கடவைக்கு மிக அருகாமையில் மதுபானசாலை ஒன்று அமைந்துள்ளதோடு,  குறித்த பிரதேசத்தில் இதற்கு முன் பல வீதி விபத்துகள் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இப்பாதசாரிகள் கடவைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட மதுபானசாலையை  அகற்றுமாறு பிரதேச மக்கள், பல்வேறுபட்ட உயர் அதிகாரிகள் வரை கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இன்றுவரை அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எந்த ஒரு தரப்பினரும் எடுக்கவில்லை என்பதும் குறித்த பிரதேசத்தில் பாதசாரிகள் அவை தொடர்பான பெயர்ப்பலகை நடப்பட்டிருந்த கம்பமும் அகற்றப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளை  செலுத்திய நபர் தலவாக்கலை லிந்துலை நகரசபை உறுப்பினர் ஒருவரின் புதல்வர் என்பதோடு, மோட்டார் சைக்கிள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதிலும், அதற்கு உரிய இலக்கத்தகடுகள் எதுவும் காணப்படவில்லை என, விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...