இணக்க அரசியல் ஊடாக நாடு சுபிட்சம் காணட்டும்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் அரசாங்க உயர் மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக ஆளும் தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இந்தக் கைதிகள் விடயத்தில் எவ்வாறான போக்குகளை கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் சில அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரதமரை சந்தித்த போது தமிழ் மக்கள் மற்றொரு தடவை ஏமாறக் கூடாது, அப்படி நடந்தால் அரசாங்கத்திற்குத்தான் அபகீர்த்தியை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி, தமிழ்க் கைதிகள் விடுதலை முயற்சியை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் போது பதிலளித்த பிரதமர், இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எடுத்து கூறியுள்ளதாகவும் எந்த நேரத்திலும் சாதகமான சமிக்ஞைகள் வெளிவரலாம் என்றும் சம்பந்தனிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றார்.

பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமாக இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஆழமாக உள்வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முழு உலகமும் பெரும் நெருக்கடிக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இணக்கப்பாடு இல்லாத அரசியல் நடத்திக் கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது என்பது இன்று உணரப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளுடனும் அரசாங்கத்துடனும் தமிழ்க் கட்சிகள் இணக்க அரசியலை மேற்கொள்வதன் மூலம் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியும். இனம், மதம், மொழி என்று நாம் பிரிந்து நின்று பயணிக்க முடியாது. இணைந்தும் இணங்கியும் வாழ வேண்டிய கடப்பாட்டை அனைவரும் கொண்டுள்ளோம்.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளை ஒருபோதும் புறந்தள்ளி விட முடியாது. பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் தமது ஆட்சிக் காலங்களில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டத் தவறவில்லை. பேச்சுவார்த்தைகள், இணக்கப்பாடுகள், வேலைத் திட்டங்கள் என்றெல்லாம் முன்னெடுக்கப்பட்டன. காரியம் கைகூடும் போது அனைத்தும் சீர்குலைந்தன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதில் அதிஉச்ச செயற்பாடுகளை முன்னெடுக்க மனஉறுதி கொண்டிருப்பதை இப்பொழுது நன்றாக அவதானிக்க முடிகிறது.

அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடக்கியுள்ளார். அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும் பிரதமரும் உரிய கவனம் செலுத் வேண்டியதன் அவசியத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது விடயத்தில் உரிய கவனம் செலுத்துவதாக பிரதமர் உறுதி அளித்திருக்கிறார்.

முதற்கட்ட பணியாக நீண்ட காலமாக சிறையில் வாடும் 21 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். நேற்றுமுன்தினம் அவர்களின் விடுதலைக்கான வழி குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது. இது குறித்து போதுமான ஆலோசனைகள் பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. எனவே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் நம்பிக்கை தென்படுகிறது. ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களின் விடுதலைக்கு வழி செய்வேன் என்று பிரதமர் மீண்டும் தெரிவித்திருக்கின்றார். இதற்கான திட்டம் குறித்து சுமந்திரனிடமிருந்து ஆலோசனை பெற்று பிரதமர் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

உண்மையிலேயே தமிழ்க் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஆரோக்கியமாகவும் பெறுமதி மிக்கதாகவும் காணப்படுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் இந்த விடயங்களை சாமர்த்தியமாக கையாண்டு இருப்பதை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு நாடு அழிவுக்கு செல்வதை விட அனைவரும் ஒன்றுபட்டு இணக்க அடிப்படையில் தீர்வு காண முற்படும் போது நாடு சுபிட்சம் அடையும் என்பது உறுதி.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசு காட்டி வரும் அக்கறை பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழ்த் தரப்புக்கள் எல்லாம் இந்த விடயத்தில் முட்டி மோதிக் கொண்டிருக்காமல் நல்லதொரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் இப்போது நம்பிக்கையொன்று தோன்றியுள்ளமை உண்மையில் நிம்மதி தருகின்றது.

எவ்வாறாக இருந்தபோதும் தமிழினம் தொடர்ந்தும் அவநம்பிக்கையில் வாழ முடியாது. அவர்கள் தென்னிலங்கையுடன் இணங்கி வாழ்வதற்கான நிலைமை விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இன்று கிட்டியுள்ளது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தரப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் நீட்டுகின்ற கரங்களைப் பற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

 

 


Add new comment

Or log in with...