மக்களின் அலட்சியம் ஆபத்துக்கு வழிவகுக்கும்! | தினகரன்


மக்களின் அலட்சியம் ஆபத்துக்கு வழிவகுக்கும்!

கொவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள போதிலும் அதன் தாக்கம், பாதிப்புக்கள் தொடர்பில் கவனயீனமாகவும் பொறுப்பற்ற வகையிலும் நடந்து கொள்பவர்களை நாட்டில் பரவலாக அவதானிக்க முடிகின்றது. இந்நிலைமையை இட்டு சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நாட்டில் இவ்வைரஸ் தொற்று பதிவாகத் தொடங்கியது முதல் அரசாங்கம் இதன் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக உச்சபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் ஊரடங்குச் சட்டம், லொக்டவுன் என்பன பிரதானமானவை ஆகும். அத்தோடு சுகாதார அறிவூட்டல்களும், வழிகாட்டல்களும் பரந்தடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன.

இதன் பயனாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா போன்றவாறான நாடுகளின் நிலையை அடைவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இதற்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பும் பெரிதும் உதவியுள்ளது.

இதன் காரணத்தினால்தான் இந்நாட்டில் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக இற்றைவரையும் 1027 பேர் இனம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 569 பேர் குணமடைந்துள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அபிவிருத்தி அடைந்துள்ள சில நாடுகளில் கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புக்கள், தாக்கங்களுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கை சுகாதார சேவைக்கு கிடைத்துள்ள பாரிய வெற்றியாக கொரோனா தொற்று பரவலில் காணப்படும் வீழ்ச்சியைக் குறிப்பிட முடியும்.

ஆனாலும் சுகாதார சேவையில் இலங்கையை விடவும் கீழ் மட்டத்தில் இருக்கும் நேபாளம், கம்போடியா, தாய்வான் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளில் பாரிய வெற்றி கண்டிருக்கின்றன. அதற்கு அந்தந்த நாடுகளது மக்களின் முழுமையான ஒத்துழைப்பே காரணமாகும். அந்நாடுகளில் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் ஐநூறைக் கூட இற்றை வரையும் அடையவில்லை. உயிரிழந்தவர்கள் கூட விரல் விட்டெண்ணி விடக் கூடிய அளவிலானவர்களாக உள்ளனர். அதனால் அந்நாடுகளது கொரோனா பரவல் தவிர்ப்பு அனுபவங்கள் குறித்து இலங்கையும் கவனம் செலுத்துவது பயன்மிக்கதாக இருக்கும்.

இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பயனாக கடந்த இரு வாரங்களாக தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்களில் தங்கி இருப்பவர்கள் மத்தியில் தான் இவ்வைரஸ் தொற்று பதிவாகின்றது. வேறிடங்களில் உள்ள பொதுமக்கள் எவரும் இதற்கு உள்ளாகவில்லை.

அதன் விளைவாக கொரோனா தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தவென முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தளர்த்தி நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. இது மக்களின் சமூக, பொருளாதார நலன்களை முற்றிலும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானமாகும்.

இதை விடுத்து இந்நாட்டில் இவ்வைரஸ் தொற்று முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது எனக் கருத முடியாது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சுகாதார அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் பொதுமக்கள் உச்சளவில் பின்பற்ற வேண்டுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஏனெனில் இந்நாட்டில் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் பொதுமக்களின் எண்ணிக்கையில் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளான 94 வயது மூதாட்டி கூட முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி இருந்தாலும் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி இருக்கிறது. அத்தோடு நேற்றுமுன்தினம் கூட 35 கடற்படையினர் இவ்வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இந்நாட்டில் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டிருப்பவர்களில் பெரும் பகுதியினர் கடற்படையினர் என்பது தெரிந்ததே.

அதேவேளை உலகில் இவ்வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் உள்ளான நாடாக ஐக்கிய அமெரிக்கா விளங்குகின்ற போதிலும் எமது அயல் நாடான இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இவ்வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதன்படி இவ்வைரஸ் தொற்று இலங்கையில் மாத்திரமல்லாமல் பிராந்தியத்திலும் உலகிலும் முழுமையான கட்டுப்பாட்டு நிலையை அடையவில்லை என்பது மிகவும் தெளிவாகின்றது. அதனால் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தவென மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படுகின்ற தளர்வு நடவடிக்கைகளை மக்கள் பிழையாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

தளர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வங்கிகள், வர்த்தக நிலையங்கள், பொருட்கள் விற்பனை கூடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நடந்து கொள்ளும் முறை கவலையளிப்பதாகவுள்ளது. கொரோனா பரவலைத் தவிர்க்கவென மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் ஏறெடுத்தும் பார்க்காதவர்களாக பலர் நடந்து கொள்கின்றனர். சமூக இடைவெளியைப் பேணாது கூட்டங் கூட்டமாக வங்கிகள், விற்பனை நிலையங்களில் மக்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அத்தோடு முகக்கவசம் அணியாதவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருக்கின்றது. ஆனால் இவர்கள் தங்களது ஆரோக்கியம் தொடர்பாக மாத்திரமல்லாமல் சமூகத்தில் ஏனையவர்களது ஆரோக்கிய நலன்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னும் முற்றாக நீங்கி விடவில்லை.

ஆகவே கவனயீனத்தைத் தவிர்த்து கொரோனா பரவுதலைத் தவிர்க்கவென சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் உச்சளவில் கடைப்பிடித்து ஒழுகுவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அது காலத்தின் அவசியத் தேவையாகும்.

 

 


Add new comment

Or log in with...