டெங்கு தலைதூக்குமென்பதில் இனிமேல் விழிப்புணர்வு தேவை | தினகரன்


டெங்கு தலைதூக்குமென்பதில் இனிமேல் விழிப்புணர்வு தேவை

நாட்டில் மழைக் காலம் ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கத்தை பரவலாக அவதானிக்க முடிகின்றது.

பொதுவாக நுளம்புகள் பல நோய்களைக் காவிப் பரப்பும் இயல்பைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் டெங்கு, சிக்குன்குன்யா, யானைக்கால் நோய், மலேரியா ஆகியன குறிப்பிடத்தக்க நோய்களாகும். இந்த நோய்கள் அனைத்தையும் காவிப் பரப்பும் நுளம்புகள் இந்நாட்டில் காணப்படுகின்றன.

அதிலும் மழைக்காலத்துடன் சேர்ந்து டெங்கு வைரஸை பரப்பும் நுளம்புகள் பல்கிப் பெருகுவது அண்மைக் காலத்தில் வழக்கமாகியுள்ளது. இது மிக ஆபத்துமிக்க நுளம்பாகும்.

கடந்த வருடம் கூட இவ்வகை நுளம்பின் தாக்கம் காரணமாக இந்நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவ்வருடமும் முதல் நான்கு மாத காலப் பகுதியில் இவ்வின நுளம்புகளின் தாக்கத்திற்கு 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள மழைக்காலம் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அம்பன் சூறாவளியினால் உருவாகியுள்ள சீரற்ற காலநிலை என்பன டெங்கு வைரஸை காவிப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்திற்கு சாதகமான சூழலைத் தோற்றுவித்திருக்கின்றன.

அதேநேரம் ஏற்கனவே மழைக்காலம் ஆரம்பமானதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட பதினொரு மாவட்டங்கள் டெங்கு வைரஸ் பரவும் அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களாக சுகாதாரத் துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் அநுராதபுரம் மாவட்டத்தில் டெங்கு வைரஸ் நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக மாவட்ட தொற்று நோய்கள் பரவல் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டி இருக்கின்றது.

இதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க “சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் விளைவாக டெங்கு வைரஸ் பரவுதல் அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதுதான் உண்மை. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட எல்லா மட்டத்தினரதும் அவதானம் முற்றிலும் கொரோனா வைரஸ் பரவுதல் தவிர்ப்பு தொடர்பில்தான் குவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

கொவிட்- 19 வைரஸ் உலகிற்கு புதியது. அதன் தாக்கமும் பாதிப்புக்களும் முழு உலகையுமே கிலி கொள்ளச் செய்திருக்கின்றன. இவ்வைரஸ் சீனாவின் உஹான் நகரில் தோற்றம் பெற்றது முதலான முதல் ஐந்து மாத காலப் பகுதிக்குள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது. அத்தோடு 47 இலட்சத்துக்கும் மேற்பட்டோரைப் பாதித்து மூன்று இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது இவ்வைரஸ் பாதிப்பு காரணமாக அபிவிருத்தி அடைந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பெரும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளன.

இலங்கையிலும் கூட இவ்வைரஸ் தொற்றுக்கு நேற்று வரையும் சுமார் ஆயிரம் பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்நாட்டில் இவ்வைரஸ் தொற்று பதிவாகத் தொடங்கியது முதல் இற்றை வரையும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கு இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையையும் நடாத்தப்பட்டுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் எடுத்துப் பார்க்கும் போது இந்நாட்டில் இவ்வைரஸ் பரவுதல் பெரிதும் வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது.

அதேநேரம் கடந்த 15-16 நாட்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருப்பவர்களைத் தவிர எவரும் இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படவில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது ஆறுதலானதும் நம்பிக்கை தரக் கூடியதுமான செய்திதான். அதற்காக கொரோனா வைரஸ் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி தலைமையில் அரசாங்கமும் சுகாதார துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால்தான் இந்த அடைவுகளைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கின்றது.

அதன் காரணத்தினால் கொரோனா வைரஸ் பரவுதல் தவிர்ப்பு தொடர்பில் தொடர்ந்தும் விழிப்புணர்வுடனும் சுகாதாரத் துறையினரின் அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் கடைப்பிடித்தும் ஒழுக வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருப்பதை எவரும் மறந்து விடலாகாது.

அத்தோடு டெங்கு வைரஸ் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியம். ஏனெனில் கொரோனாவுக்கும் டெங்கு வைரஸ் தாக்கத்திற்கும் பிரதான அறிகுறியாக இருப்பது காய்ச்சல். அதனால் ஒரு நோயாளி எந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பதைக் கண்டறிவதில் கூட நெருக்கடிகள் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க.

அதன் காரணத்தினால் டெங்கு நுளம்புகள் பல்கிப் பெருகுவதற்கு வழிவகுக்கக் கூடிய சுற்றாடலில் காணப்படும் மழைநீர் தேங்கக் கூடிய கைவிடப்பட்ட அனைத்து பொருட்களையும் ஒழுங்குமுறையாக அப்புறப்படுத்தி விடுவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். இதன் ஊடாக நுளம்பு பெருக முடியாதபடி சுற்றாடல் சுத்தமாகவும் உலர் நிலையிலும் இருக்கும். அப்போது டெங்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காது.

 


Add new comment

Or log in with...