- படைவீரர்கள் தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாக ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை
- உயிர் தியாகங்கள் செய்து பாதுகாத்த நாட்டை அனைவரும் கண்ணியமாக வாழக்கூடிய சுபீட்சமான தேசமாக மாற்றுவதற்கு முழுமையான அர்ப்பணிப்பு
நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புகளை செய்த படைவீரர்கள் தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாக தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற தேசிய படைவீரர்கள் நினைவு தின விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு 11வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு படைவீரர்களுக்கு தேசத்தின் கௌரவத்தை தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நினைவு தின விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தமது நாட்டின் படைவீரர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்களை பாதுகாப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இராணுவத்தில் 20 வருடங்கள் செயற்திறமான சேவையில் ஈடுபட்ட அதிகாரி என்ற வகையிலும் பின்னர் 10 வருடங்கள் பாதுகாப்பு செயலாளராகவும், ஒரு பிரஜை என்ற வகையிலும் எமது படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நான் நன்கறிவேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யுத்தத்தின் வலிகள் தனக்கு நன்றாக தெரியும் என்பதால் பெரும் தியாகங்களை செய்து அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தித்தந்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
படைவீரர்கள் உயிர் தியாகங்கள் செய்து பாதுகாத்த இந்த நாட்டை அனைத்து பிரஜைகளும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய சுபீட்சமான தேசமாக மாற்றுவது படைவீரர்களுக்கு செய்யும் உயர்ந்த கௌரவமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனதீர வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவு தின விழா முழுமையாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி இடம்பெற்றது.
மல்வத்தை, அஸ்கிரிய பீடங்கள் உள்ளிட்ட மூன்று நிகாயக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மகாசங்கத்தினர், கருதினால், ஏனைய சமயத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், முப்படைகளின் தலைவர்கள், முன்னாள் கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படை பிரதானி உட்பட படைவீரர்கள், படைவீரர்களின் குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை
மே மாதம் 19ஆம் திகதி இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நாளாகும்.
இற்றைக்கு 11 வருடங்களுக்கு முன்னர் 2009 மே மாதம் 19ஆம் திகதி, நாம் சுமார் 30வருடங்களாக இந்த நாட்டிற்கு சாபமாக இருந்து வந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்தோம்.
முப்படைகளினதும் தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதற்கு தலைமைத்துவத்தை வழங்கினார். பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் மூலம் மக்களுக்கு பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கும், தங்களது மனித உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும் முடியுமான சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் சுதந்திரமானதும் சுயாதீனமாதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி, ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தடையின்றி, நாட்டின் எந்தவொரு இடத்திலும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல் மீண்டும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. அச்சமும் பயமும் சூழ்ந்திருந்த எமது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எமது படைவீரர்களும் அவர்களின் குடும்பங்களும் பெரும் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.
யுத்தம் என்பது மலர்தூவிய பஞ்சணையன்று. குறிப்பாக சட்டத்தை மதிக்காத உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்துடன் போராடும் போது படைவீரர்களுக்கு பல்வேறு துன்பகரமான அனுபவங்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.
அந்த 30 வருட காலப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து இடங்களிலும் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். தற்கொலை குண்டுதாரிகள், பஸ் வண்டிகளிலும் புகையிரதங்களிலும் வைக்கப்பட்ட குண்டுகள், கட்டிடங்கள் மீதான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இந்த நாட்டில் பெருமளவு உயிர் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி நோக்கம் நாட்டில் நீண்ட கால சமாதானத்தை ஏற்படுத்துவதாகும்.
படைவீரர்கள் செய்த அந்த பெரும் அர்ப்பணிப்பின் காரணமாக இன்று எமக்கு ஒன்றுபட்ட நாட்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
பௌத்த சமயத்தினால் வளம்பெற்ற எமது நாட்டில் அனைத்து சமயத்தினருக்கும் அனைத்து இனங்களுக்கும் புகலிடமான ஒரு நிர்வாக முறைமை உள்ளது. வரலாறு நெடுகிலும் இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலாயர், பரங்கியர் ஆகிய அனைத்து இனங்களும் சமமாக வாழும் உரிமையை பெற்றிருந்தனர்.
எம்மை பிரித்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் நோக்கம். அவர்களது நோக்கம் நிறைவேறியிருந்தால் எமது வரலாறு மாறியிருக்கும். மக்கள் ஒருவரையொருவர் வெறுக்கும், எல்லைகளுக்காக தொடர்ந்து போராடும், யுத்த பீதி மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிய, மற்றுமொரு துரதிஷ்டமான, பிளவுபட்ட நாடாக இலங்கை மாறியிருக்கும். அந்த அழிவிலிருந்து நாட்டை விடுவித்த கௌரவத்தை, நீண்ட காலமாக எமது நாட்டின் சமாதானத்திற்காக போரிட்ட அனைத்து துணிச்சல்மிக்க படைவீரர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மூன்று தசாப்தங்களாக இந்த வெற்றிக்காக உயிர் தியாகம் செய்து போரிட்ட ஜெனரல் கொப்பேகடுவ, ஜெனரல் விஜய விமலரத்ன உள்ளிட்ட அனைத்து படைவீரர்களையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த கௌரவத்துடன் நினைவுகூர்கின்றோம்.
இராணுவத்தில் 20 வருடங்கள் செயற்திறமான சேவையில் ஈடுபட்ட அதிகாரி என்ற வகையிலும் பின்னர் 10 வருடங்கள் பாதுகாப்பு செயலாளராகவும், ஒரு பிரஜை என்ற வகையிலும் எமது படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நான் நன்கறிவேன். யுத்தத்தின் வலிகள் எனக்கு நன்றாக தெரியும். எனவே பெரும் தியாகங்களை செய்து அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தித்தந்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். எனது அரசாங்கத்தின் கீழ் எமது படைவீரர்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
அவர்களது உரிமைகளை பாதுகாப்பது ஒரு தேசிய பொறுப்பாகும். உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தெளிவாக தமது நாட்டின் படைவீரர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.
அந்த வகையில் எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை.
Even leaders of powerful countries have emphatically stated that they would not allow any action against their war heroes. As such, in a small country like ours where our war heroes have sacrificed so much, I will not allow anyone or organization to exert undue pressure on them and harass them.
If any international body or organization continuously target our country and our war heroes, using baseless allegations, I will also not hesitate to withdraw Sri Lanka from such bodies or organizations."
மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்திற்கு எதிரான போருக்கு பங்களிப்பு செய்த அனைத்து படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நாம் இச்சந்தர்ப்பத்தில் தேசத்தின் நன்றியை தெரிவிக்கின்றோம்.
படைவீரர்கள் உயிர் தியாகங்கள் செய்து பாதுகாத்த இந்த நாட்டை அனைத்து பிரஜைகளும் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய சுபீட்சமான தேசமாக மாற்றுவது அவர்களுக்கு செய்யும் உயர்ந்த கௌரவமாகும். இதற்காக உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்க முன்வாருங்கள் என்று அனைத்து தேசப்பற்றுள்ள பிரஜைகளிடமும் இந்த படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்திலிருந்து நான் கேட்டுக்கொள்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி
மும்மணிகளின் ஆசிகள்
Add new comment