விவசாய பொருளாதாரத்துக்கு மீண்டும் திரும்பும் இலங்கை

உலக நாடுகள் எங்கும் இன்று நிலவுகின்ற கொரோனா அச்சுறுத்தலின் அடுத்த கட்டமாக அனைத்து நாடுகளிலும் பெரும் உணவுப் பஞ்சம் எதிர்நோக்கப்படுமென்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

கொரோனாவுக்குப் பின்னரான காலகட்டத்தில் உலகம் எதிர்நோக்கவிருக்கின்ற பாரியதொரு நெருக்கடியாக உணவுத் தட்டுப்பாடு இருக்கப் போகின்றதென்ற எச்சரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச முகவர் அமைப்புகளும் சமீபத்தில் அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தன.

கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தாலும் கூட எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு உணவுத் தட்டுப்பாடுதான் பெரும் பிரச்சினையாக இருக்கப் போகின்றது. ஏனெனில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அநேகமான நாடுகளில் உணவு உற்பத்தி இப்போது முடங்கிப் போய் விட்டது. விவசாய பொருளாதாரத்தில் தங்கியிருந்த நாடுகளே இன்று உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கமென்பது உலக மகாயுத்தத்துக்கு ஒப்பானதென்பதுதான் சர்வதேச வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் முடிவுகளையடுத்து உலகின் பெருமளவான நாடுகளில் கடுமையான உணவுப் பஞ்சம் எதிர்கொள்ளப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. உலகப் போர்களின் போது பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து போனதாலேயே அவ்வேளையில் பெரும் உணவுப் பஞ்சம் அநேக நாடுகளை அக்காலத்தில் வாட்டியெடுத்தது.

உலகின் இன்றைய நிலைமையும் ஏறக்குறைய அவ்வாறானதுதான். உலகின் மீது பாரிய யுத்தமொன்றை கொரோனா வைரஸ் இப்போது தொடுத்து இருக்கின்றது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸினால் ஆரம்பிக்கப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான யுத்தம் நான்கரை மாதங்கள் கடந்த பின்னரும் இன்னுமே முடிவுக்கு வந்தபாடாக இல்லை. உலகம் கொரோனாவுக்கு எதிராக இன்னுமே போராடிக் கொண்டுதான் இருக்கின்றது.

உலகமே இன்று நிலைகுலைந்து போய் விட்டது! கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியானது உலகையே இவ்வாறு நிலைகுலைய வைக்குமென்று நாம் எவருமே முன்னர் ஒருபோதும் நினைத்தும் பார்த்திருக்க மாட்டோம்.

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய மனித உயிரழிவுகளின் எண்ணிக்கை சுமார் மூன்று இலட்சமாகி விட்டது. அதே போன்று உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையானது பல மில்லியன்களாக அதிகரித்தபடி சென்று கொண்டிருக்கின்றது.

மனித உயிரழிவுகள் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் குடும்பம், நாடு என்று ஒவ்வொரு விடயத்திலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

குடும்ப பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம் மாத்திரமன்றி உலகின் பொருளாதாரமே படுபாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விட்டது.

குடும்பங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு விட்டது. வறுமையின் பிடிக்குள் சிக்கி வாழ்கின்ற குடும்பங்களின் பரிதாபம் விபரிக்க முடியாதது. போதாக்குறைக்கு அக்குடும்பங்கள் அதிக விலை கொடுத்து தமக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய அவலம் நிலவுகின்றது.

உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தொழில் இழந்தோரின் எண்ணிக்கை கோடிக்கணக்காக உள்ளது. உலகின் பெரும் வல்லரசு நாடுகளே திணறிப் போய் நிற்கின்றன.

அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் செயற்பாடு ஸ்தம்பிதமடைந்து, முடங்கிப் போய் விட்டதனால் அவை வருமானத்தை இழந்து நிற்கின்றன. அரசாங்க நிறுவனங்கள் கூட தமது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குத் திண்டாடுகின்ற இன்றைய நிலையில், தனியார் நிறுவனங்களின் நிலைமை இதனை விட மோசமாகும். உலகின் ஏராளமான தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ததனால் வேலை இழந்தோரின் தொகை கணக்கிட முடியாததாகும்.

இலங்கையில் இவ்வாறான பாரதூரமான நிலைமை இன்னுமே உருவெடுக்காத போதிலும்,உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் ஏராளமானோர் தமது தொழிலை இழந்து இன்று நடுத்தெருவில் நிற்பதை நாம் பாடமாகக் கொள்வது நலம்.

இரண்டாம் உலகமகா யுத்தத்துக்குப் பின்னர் உலகம் சந்தித்துள்ள பாரிய நெருக்கடி இதுதான். உலக பொருளாதாரம் இத்தனை தூரம் வீழ்ச்சிக்குச் சென்ற பின்னர் அதன் அடுத்த கட்டம் உணவுத் தட்டுப்பாடாகத்தான் இருக்கப் போகின்றது என்பதுதான் நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.

எனவே உலக நாடுகள் அனைத்தும் உணவுப் பொருள் உற்பத்தியில் இனிமேல் முழுமையான கவனம் செலுத்த வேண்டுமென்று அவசர ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

உணவு உற்பத்திக்கான துரித திட்டங்களை இலங்கை ஏற்கனவே முன்னெடுத்திருக்கிறது. நெற்செய்கையை அதிகரித்தல், வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை போன்ற விடயங்களில் எமது அரசாங்கம் இப்போது விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அதாவது உணவுத் தேவையில் வெளிநாடுகளில் இனிமேல் தங்கியிருக்க முடியாதென்பதே உண்மை. மாவட்டங்கள் தோறும் இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலகின் ஒவ்வொரு நாட்டையுமே கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதனால் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதென்பது சாத்தியமானதாக இருக்கப் போவதில்லை. எனவே சுய உணவு உற்பத்தியே இனிமேல் எமக்குக் கைகொடுக்கப் போகின்றது.

இலங்கையானது பண்டைய காலம் தொட்டு விவசாய பொருளாதார பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும். ஆனாலும் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கடந்த கால அரசுகள் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படவில்லை. இதனால் பாரம்பரிய விவசாயம் வீழ்ச்சியடைந்து விட்டது.

இப்போது கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக எமது நாட்டில் விவசாயம் இனிமேல் புத்துயிர் பெறப் போகின்றது. இதனை பசுமைப் புரட்சியாக நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நில வளம், நீர் வளம் மிக்கது எமது நாடு. விவசாயத்துக்கு ஏதுவான அனைத்தும் நிறைந்த எமது நாட்டில் விவசாயத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வருவது சாத்தியமானதாகும். எனவே உணவு உற்பத்தி மீதுதான் இனிமேல் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

 

 

 

 


Add new comment

Or log in with...