படகு கவிழ்ந்து விபத்து; இரு மீனவர்கள் பலி | தினகரன்

படகு கவிழ்ந்து விபத்து; இரு மீனவர்கள் பலி

ஒருவர் வைத்தியாலையில் அனுமதி

பயாகல, மக்கொன துடாவ கடற்கரைக்கு மீன்பிடிக்காக 03 பேருடன் சென்ற படகொன்று இன்று (18) பகல் கவிழ்ந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மற்றுமொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மக்கொன துடாவ வீதியில் வசிக்கும் அன்டன் பிரசன்ன பெனாண்டோ  (53), மக்கொன பெலவத்தவில் வசிக்கும் நிரோஷன் ஜயசூரிய (43) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த படகின் உரிமையாளரான அன்டன் பெஸ்டின் பிரியந்த (49), நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த இருவரும், குறித்த படகு உரிமையாளருடன் இன்று காலை 7.30 மணியளவில் கடலுக்கு புறப்பட்டுச் சென்று, நண்பகல் 12.30 மணியளவில் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது,  கரை தெரியும் தூரம் இருந்த வேளையில், திடீரென வீசிய பலத்த காற்றுடன் பாரிய அலையில் சிக்கிய படகு கவிழ்ந்து இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வனர்த்தம் இடம்பெற்றதை அவதானித்த மற்றுமொரு மீன்பிடிப் படகிலிருந்தவர்கள்,  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து,  மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இருவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது அவர்களில் ஒருவர் உயிரிழந்து காணப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

படகிலிருந்த மற்றைய மீனவரான படகு உரிமையாளர் உடனடியாக நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த படகில் பயணித்த மற்றைய மீனவர், படகு கவிழ்ந்ததை அடுத்து காணாமல் போயிருந்ததோடு, சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அவரது சடலம் குறித்த படகில் இருந்த வலையில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...